தற்போதைய செய்திகள் மற்றவை

பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகள் இயக்க வேண்டும்-அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

மதுரை

படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தடுக்க பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கழக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் 1005 தொலைதூர மற்றும் நகர பேருந்துகள் உள்ளன. இதில் 729 நகர பேருந்துகளில் 410 பேருந்துகளில் மட்டும் தான் பெண்களுக்கு, மாணவர்களுக்கு, தியாகிகளுக்கு, திருநங்கைகளுக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மதுரை மாவட்டத்தில் 18 பணிமனைகள் உள்ளன.

இதில் 16 பணிமனைகளில் ஊழியர்களை முறையாக பணிகளில் ஈடுபடுத்தாததால் பேருந்து வழித்தடங்களில் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அதனால் மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. காலை, மாலை பள்ளி நேரங்களில் 100 சதவீத பேருந்துகளை இயக்குவதை உறுதி செய்ய வேண்டும். அப்படி செய்தால் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கலாம்.

திருமங்கலம் தொகுதியில் உள்ள பேரையூர், சந்தையூர் பகுதிகளில் சின்ன வெங்காயம் பயரிடப்பட்டுள்ளது. தொடர் மழையால் வெங்காயம் அழுகி விட்டது. ஆகவே தோட்டக்கலை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய இழப்பீடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஆயிரம் ஏக்கரில் மல்லிகை பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது மழைநீர் சூழப்பட்டு விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.