சிறப்பு செய்திகள்

ஸ்டாலினை போல நாங்கள் ஜோசியம் பார்க்க மாட்டோம் – முதலமைச்சர் திட்டவட்டம்

சென்னை

ஸ்டாலினை போல நாங்கள் ஜோசியம் பார்க்க மாட்டோம். திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதால் நாங்கள் மக்களை துணிச்சலாக சந்திப்போம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர், 8 மாதத்தில், 6 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்று சொல்கிறார். ஏற்கனவே 2 மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று சொன்னார், இதுகுறித்து..

பதில்: அந்த ஜோசியத்தை கண்டுபிடித்து சொன்னீர்கள் என்றால், எங்களுக்கும் நன்றாக இருக்கும். அவர் ஜோசியம் பார்க்கிறாரென்று நினைக்கிறேன். நாங்கள் ஜோசியம் பார்ப்பதில்லை, மக்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது மக்களிடத்தில் தான் இருக்கிறது, ஸ்டாலிடனிடம் அல்ல.

கேள்வி: திமுக எம்.பி. கதிர் ஆனந்தை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மிரட்டினார்களாமே?

பதில்: அரண்டவனுக்கு மிரண்டதெல்லாம் பேய் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல், எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. மிரட்டினால் பயப்படுகிறவர்களா அவர்கள்? இதை நாட்டு மக்கள் நம்புவார்களா? அதுவும் யார்? துரைமுருகன் அவர்களுடைய மகன், அவரை மிரட்ட முடியுமா? இதெல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கேள்வி: 10 வருடம் பொறுத்திருந்த நாங்கள் 6 மாதங்கள் பொறுக்க முடியாதா? எங்கள் கொடிதான் சட்டமன்றத்தில் பறக்கப் போகிறது என்று …

பதில்: பொறுங்கள், பொறுத்திருங்கள், நாங்கள் வேண்டாம் என்று சொன்னோமா.

கேள்வி: உங்களுடைய நிலைபாடு…

பதில்: நாங்கள்தான் எங்களுடைய நிலைபாட்டை சொல்லியிருக்கிறோமே. மக்களுக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். மதுரையில் ரிங்ரோடு, போட்டுக் கொடுத்திருக்கிறோம், நிறைய பாலங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். வைகை ஆற்றின் ஓரமாக இரண்டு பகுதிகளிலும் நிறைய கட்டடங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். எய்ம்ஸ் மருத்துவமனை கொடுத்திருக்கிறோம். 11 மருத்துவக் கல்லூரிகள், சட்டக்கல்லூரி, அதிகமான அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிகள் போன்றவற்றை கொடுத்திருக்கிறோம். கல்வியில் பல திட்டங்களை கொடுத்திருக்கிறோம். குடிமராமத்துத் திட்டத்தின் மூலமாக பல திட்டங்களை கொடுத்திருக்கிறோம்.

தடுப்பணைகளை கட்டிக் கொடுத்திருக்கிறோம். ராமநாதபுரம் மாவட்டத்தில் காவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை சுமார் ரூபாய் 14,000 கோடி செலவில் நிறைவேற்றவிருக்கிறோம். அந்தத் திட்டத்தின் மூலமாக கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள ஏரிகள் நிரப்பப்படும். ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை நாங்கள் தடுப்பணை கட்டி திருப்பி விட்டு வறண்ட பகுதியிலுள்ள ஏரிகளுக்கு அனுப்புகிறோம். இவ்வளவு திட்டங்களை செய்திருக்கிறோம்.

மக்களை துணிச்சலாக பார்ப்போம். இந்த ஆட்சி மிகச்சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை பொறுக்க முடியாமல் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. எங்களைப் பொறுத்தவரை, மக்களுக்கு செய்யவேண்டிய திட்டங்களை சிந்தாமல், சிதறாமல் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.