சிறப்பு செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்கு யார் காரணம்? ஸ்டாலினுக்கு, முதலமைச்சர் சரமாரி கேள்வி

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: நீங்கள் ஒரு விவசாயியாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால், எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் உங்களை விவசாயி என்று சொல்லக்கூடாதென்ற கருத்தைச் சொல்லியுள்ளதற்கு உங்கள் கருத்து என்ன?

பதில்: விவசாயியை விவசாயி என்றுதான் சொல்ல முடியும். வேறு என்னவென்று சொல்வது. இந்த ஆட்சியில் எந்தக் குறையையும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால், விவசாயிகளுக்காக காவேரி-குண்டாறு எனும் மிகப் பெரிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற நான் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். குடிமராமத்துத் திட்டம் கொண்டு வந்துள்ளோம்.

தடுப்பணைகள் கட்டிக் கொடுத்துள்ளோம். நான் ஒரு விவசாயியாக இருக்கின்ற காரணத்தால்தான் இவ்வளவு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். எனவே, நான் விவசாயி என்று அவர் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், இன்றும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். நான் விவசாயி என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன். விவசாயத்தைப் பற்றி ஏதும் தெரியாதவரிடம் கேட்டால் அப்படித்தான் சொல்வார்.

கேள்வி: வேளாண் மசோதாவில் தமிழ்நாடு அரசின் தெளிவான நிலைப்பாடு என்ன?

பதில்: இதுகுறித்து நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். விவசாயிகள் நலன் காக்க மூன்று சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு பயனளிக்க கூடியதாக இருக்கின்ற காரணத்தால் தான் அம்மாவின் அரசு இந்தத் திட்டத்தை ஆதரித்தது. விவசாயிகளுக்கு நன்மை பயக்கக்கூடிய எந்தத் திட்டமாக இருந்தாலும் ஆதரிப்போம். அதேவேளையில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் அம்மாவின் அரசு எதிர்க்கும். இதுதான் அம்மா அரசின் நிலைப்பாடு என்பதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.

விளைநிலங்கள் நிறைந்த டெல்டா பகுதிகளில் மீத்தேன், ஈத்தேன் எடுப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது யார்? முதன்முதலில் கொண்டு வந்ததே ஸ்டாலின் தான். அவர் தான் துவக்கி வைத்தார். அதை முடிவிற்குக் கொண்டு வந்தது யார்? பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது அம்மாவின் அரசு.

விவசாயிகளை பாதுகாத்தது அம்மாவின் அரசு. ஸ்டாலினால் மறுக்க முடியுமா? ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தது ஸ்டாலின். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசுடன் வாதாடி, போராடி அவர்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம். விவசாயம் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறோம். ஆனால், ஸ்டாலின் அந்தத் திட்டங்கள் வருவதற்கு முனைப்பு காட்டியவர், அதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டவர். அதை மறைக்கவும் முடியாது, விவசாயிகள் மறக்கவும் மாட்டார்கள்.

கேள்வி: எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் பாராளுமன்றத்தில் …?

பதில்: அதற்கு நாங்கள் விளக்கம் கேட்கப் போகிறோம். ஏனென்றால் அவரே என்னுடைய கருத்தைப் பதிய வைக்கிறேன் என்று சொல்லியுள்ளார். இருந்தாலும் அதற்கு விளக்கம் கேட்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.