தற்போதைய செய்திகள்

காவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

காவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு 2021 ஜனவரி மாத இறுதியில் அடிக்கல் நாட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு;-

காவேரி-குண்டாறு எனும் மிகப்பெரிய இணைப்பு திட்டம் சுமார் ரூபாய் 14 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் முதன்முதலாக அம்மாவின் அரசு தான் நிறைவேற்ற உள்ளது. இதுவரை ரூபாய் 14 ஆயிரம் கோடி அளவிலான எந்தத் திட்டத்தையும் நீர் மேலாண்மைக்காக செய்தது கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து கடலில் வீணாக கலக்கும் உபரி நீரை காவேரி-குண்டாறு திட்டத்தின் மூலம் கால்வாய் அமைத்து திருப்பி விடுகின்றபொழுது, ராமநாதபுரம் மாவட்டம் போன்ற வறட்சியான மாவட்டங்களிலுள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள் அனைத்தும் நிரப்பப்பட்டு, நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

இந்தத் திட்டம் கரூர் மாவட்டத்தின் கட்டளை பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் துவங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு 259 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் வெட்டப்படும். இதற்கு சுமார் ரூபாய் 14 ஆயிரம் கோடி செலவாகும். கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும். இத்திட்டம் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

பகுதி-1ல் காவேரி முதல் தெற்கு வெள்ளாறு (118 கிலோ மீட்டர்) வரையிலும், பகுதி-2ல் தெற்கு வெள்ளாறு முதல் வைகை (108 கிலோ மீட்டர்) வரையிலும், பகுதி-3ல், வைகை முதல் குண்டாறு (33 கிலோ மீட்டர்) வரையிலும் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் திட்டத்திற்கு கடந்த நிதியாண்டில், ரூபாய் 700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் இந்தத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.

இந்தத் திட்டம் நிறைவேறுகின்ற போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும். இத்திட்டம் வறட்சியான இம்மாவட்டத்தை ஒரு பசுமையான மாவட்டமாக உருவாக்குவதற்கு அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்தின் மூலம், இந்த மாவட்டத்தில் பரமக்குடி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், கமுதி, கடலாடி மற்றும் திருவாடனை ஆகிய வட்டங்களிலுள்ள 302 குளங்கள் நிரப்பப்பட்டு, நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 4 அரசு மற்றும் கலைக்கல்லூரிகளை புதிதாக கொடுத்திருக்கிறோம், 4 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 3 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தியிருக்கிறோம். ஒரு அரசு சட்டக்கல்லூரியை வழங்கியதோடு, ரூபாய் 76 கோடி செலவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இக்கல்லூரிகளால் இங்குள்ள மாணவச் செல்வங்கள் உயர்கல்வி படிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.