தற்போதைய செய்திகள்

வல்லநாட்டில் 11 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் வல்லநாட்டில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்குகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு ரூ.108.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 11 உயர்கோபுர மின்விளக்குகளை திறந்து வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி மின்வெட்டே இல்லாத நிலையை உருவாக்கினார். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும் மின் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடியில் மிகப்பெரிய அனல் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கருங்குளம் ஒன்றியம் வல்லநாட்டில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.முத்துகருப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர் கோபுர மின்விளக்கு 16 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 8 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மின்கோபுர விளக்கு ரூ.9.85 லட்சம் மதிப்பில் 11 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வல்லநாடு பகுதி இரவிலும் நல்ல ஒளியுடன் காட்சி அளிக்கும். குறைந்த அளவு மின்சார செலவில் இந்த உயர் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால் அதிக அளவு மின்சார சேமிப்பும் இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.