திருவண்ணாமலை

ஜவ்வாது மலையில் விரைவில் சாமை பதப்படுத்தும் நிலையம் திறப்பு – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தகவல்

திருவண்ணாமலை

ஜவ்வாதுமலை பகுதியில் விரைவில் சாமை பதப்படுத்தும் நிலையம் திறக்கப்படும் என்று வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள நம்பியம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி சார்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கூட்டுறவு வங்கியின் தலைவர் சி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இவ்விழாவில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பங்கேற்று பயனாளிகளுக்கு கடனுதவியை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் வி.பன்னீர்செல்வம் எம்எல்ஏ பேசியதாவது:-

ஜவ்வாது மலைவாழ் மக்களின் வசதிக்காக மலையின் மேலிருந்து கீழே இறங்க கூடாது என்பதற்காக புதிய தாலுகா அலுவலகம் கொண்டு வரப்பட்டு புதிய கட்டமும் கட்டப்பட்டுள்ளது, கருவூல அலுவலகம் கொண்டு வரப்பட்டது, மத்திய கூட்டுறவு வங்கி கொண்டு வரப்பட்டது. இதுபோல் பல்வேறு அரசு அலுவலகங்களை கழக அரசு கொண்டு வந்துள்ளது என்பதை மறக்காதீர்கள்.

ஜவ்வாது மலைக்கு சாமை பதப்படுத்தும் நிலையம் விரைவில் துவக்கப்படும் இதனால் இப்பகுதியில் விளையும் சாமையை பதப்படுத்தி இருப்பு வைத்து நல்ல விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கலாம். இப்படி எண்ணற்ற நலத்திட்டங்களை கழக அரசு செய்து வருகிறது. இதனை புரிந்துகொண்டு வரும் தேர்தலிலும் கழக அரசுக்கே உங்கள் ஆதரவை தரவேண்டும்.

இவ்வாறு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பேசினார்.

மேலும் விழாவில் 175 நபர்களுக்கு தனிநபர் கடனுதவி ரூ. 75 லட்சம், 2 மகளிர் குழுக்களுக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் வீதம் 5 லட்ச ரூபாய் கடனுதவி என மொத்தம் ரூ. 80 லட்சம் கடனுதவிகளை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்.

நிகழ்ச்சியில் வங்கியின் செயலாளர் லதா, ஜவ்வாது மலை ஒன்றிய செயலாளர் த.வெள்ளையன், ஒன்றியகுழு தலைவர் மூர்த்தி, வங்கியின் துணைத்தலைவர் வ.வெள்ளையன், வங்கியின் இயக்குநர்கள் ரா.சங்கரி, கோ.வெங்கடேசன், கு.சிவாஜி, து.மணி, கி.தனகோட்டி, ரா.லட்சுமி, கு.சடையன், து.சங்கர், சி.ரஜேந்திரன், வழக்கறிஞர் செம்பியன், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர்கள் ஜி.துரை, ஜி.சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.