தற்போதைய செய்திகள்

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் ஜான்சிராணி பூங்கா பகுதியில் கட்டப்பட்டு வரும் புராதன சின்னங்கள் மற்றும் விற்பனை அங்காடியை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அம்மாவின் அரசு உள்நாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்பதில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. அதற்கான கட்டமைப்பு வசதிகளை சிறப்பான முறையில் மேம்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு வேண்டிய அனைத்து வசதிகளை மேற்கொள்வதில் அம்மாவின் அரசு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் இதுவரை 1.30 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 3 லட்சம் வெளிநாட்டு பயணிகளும் வந்து செல்கின்றனர். இதன் மூலம் தமிழகத்திள் பொருளாதார தரம் மேம்படுவதுடன் கலாச்சார பொருட்கள் விற்பனை மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் அதிக வருமானமும் கிடைக்கிறது.

குறிப்பாக கோவில் மாநகர் என அழைக்கப்படும் நகரம் மதுரை மாநகரம் ஆகும். இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஜான்சிராணி பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த இடம் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் மாற்றி அமைக்கப் படுகிறது. ரயில் நிலையத்திலிருந்து வருவதற்கு பேட்டரி கார்கள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட உள்ளது.

மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். மதுரை மீனாட்சியம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டப பணிகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் பணிகள் முடிக்கப்படும். லோயர் கேம்ப் பகுதியில் குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும். வைகை ஆற்றின் வடக்குப் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மட்டும் வருகின்ற 2022-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் பி.எஸ்.மணியன், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் ஜெ.ராஜா, செயற்பொறியாளர்கள் சேகர், முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கியசேவியர், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.