தற்போதைய செய்திகள்

கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை

கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் 2020-21-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு மற்றும் BTech ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்களிடமிருந்து 24.08.2020 முதல் 28.09.2020 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. முதல்வரின் ஆணைக்கிணங்கவும் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் நாள் 09.10.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, இவ்வாண்டு 12,009 மாணவ , மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அதில், கால்நடை மருத்துவத்திற்கு 9787 மாணவ, மாணவியர்களும் மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 2,222 மாணவ, மாணவியர்களும் விண்ணப்பித்துள்ளனர். சென்ற ஆண்டு 18,438 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில், 15,666 மாணவ, மாணவியர் கால்நடை மருத்துவ பட்டப்பிடிப்பிற்கும் 2772 மாணவ, மாணவியர் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கும் விண்ணப்பித்திருந்தார்கள்.

இவ்வாண்டு, இதுவரை விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களும் விண்ணப்பிக்க ஒரு சந்தர்ப்பம் அளிப்பதற்காக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும் காலம் 09.10.2020 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.