தற்போதைய செய்திகள்

மகளை இழந்து தவித்து நாமக்கல் செல்ல முடியாமல் தவித்த பெண்ணுக்கு உதவி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பி வைத்தார்

மதுரை

மகளை இழந்து தவித்து நாமக்கல் செல்ல முடியாமல் தவித்த பெண்ணுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உதவி செய்து அனுப்பி வைத்தார்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்த்த மோகன்ராஜ் – திலகா தம்பதிக்கு 2 குழந்தைகள், 4 ஆண்டுகளுக்கு முன்னர் மோகன்ராஜ் உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில் திலகா 2 குழந்தையையும் ஏழ்மை நிலையிலும் வீட்டு வேலை செய்து வளர்த்து வந்துள்ளார்,

இந்நிலையில் 16 வயது மகளுக்கு இரத்த புற்றுநோய் இருப்பது நாமக்கல் அரசு மருத்துவமனை சிகிச்சையில் தெரிய வந்துள்ளது, 16 வயது பெண்ணுக்கு உடல் நல குறைவு அதிகரித்ததால் கடந்த ஜூன் 22-ந்தேதி நாமக்கல் மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் ஜூலை 1-ந்தேதி அப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்றைய முன்தினம் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்பெண்ணின் உடலை சுகாதாரத்துறையினர் அடக்கம் செய்த நிலையில் பெண்ணின் தாய் திலகா நாமக்கல் செல்ல முடியாமல் 2 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையிலேயே தங்கி இருந்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நிலையை கூறி உதவிடும் படி வேண்டுகோள் வைத்தார், திலகாவின் நிலை குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து அப்பெண்ணுக்கு வேண்டிய உதவிகள் செய்ய உத்தரவிட்டதோடு, நிதியுதவி வழங்கினார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வினய் மூலம் திலகாவுக்கு அரிசி, மளிகை பொருட்கள் கொடுத்து ஏற்பாடு செய்யப்பட்ட காரில் நாமக்கல் அனுப்பி வைக்கப்பட்டார்.