தமிழகம்

கொரோனா தொற்றிலிருந்து மக்கள் மீள ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம் – முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம்

சென்னை

கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்கள் மீள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்புப் பணிகளை பொறுத்தவரை, எங்களுடைய அரசு சிறப்பாக பணிபுரிந்து வருகிறது. கொரோனா பாதிப்பு இருக்கும் என்ற நிலையில் கூட, அனைத்து அமைச்சர்களும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று மக்களுக்கு நன்மை கிடைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதற்கும் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட காரணத்தினால் தான் சென்னையில் இந்நோய்ப் பரவல் குறைந்திருக்கிறது.

மும்பை, ஆந்திரா, ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், எங்களுடைய அரசு மற்றும் எங்கள் அமைச்சர்கள், எடுத்த நடவடிக்கைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்த முயற்சிகள், கழக பொறுப்பாளர்கள் எடுத்த முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளால், இங்கு இந்நோய்ப் பரவல் வெகுவாகக் குறைந்திருக்கிறது. நீங்கள் கூறியதைப் போல் அம்மா கிச்சனை அமைத்து, 100 நாட்கள் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றியிருக்கிறோம்.

இந்த சோதனையான நேரத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசிற்கு துணை நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் நம்முடைய கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உணவைக் கொடுத்து, அவர்கள் அதிலிருந்து மீள வேண்டுமென்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நல்ல செயல்களை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். 1 லட்சம் உறுப்பினர்களை, 2 லட்சம் உறுப்பினர்களை சேர்த்திருக்கிறேன் என்று அவர் கூறுகிறார். சேர்ந்துக் கொள்ளுங்கள் யார் வேண்டாம் என்றார்கள்? அது அவருடைய கட்சி, நாங்கள் எப்படி தலையிட்டு பேசமுடியும்?

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.