தற்போதைய செய்திகள்

கழக ஆட்சியில், ஸ்டாலினால் குறை கண்டுபிடிக்க முடியவில்லை – முதலமைச்சர் பேட்டி

சென்னை

தேடி, தேடி பார்த்தும் ஒன்றும் சிக்கவில்லை. கழக ஆட்சியில், ஸ்டாலினால் குறை கண்டுபிடிக்க முடியவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு;-

தமிழ்நாட்டில் இப்பொழுதும் உளுந்து, துவரை, பச்சைப்பயறு மற்றும் தேங்காய் கொப்பரை ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச ஆதார விலை இருந்தாலும், அதற்கு வெளிச்சந்தையில் நல்ல விலை கிடைக்கும்போது விவசாயிகள் அவற்றை வெளிச்சந்தையில் விற்பனை செய்து நல்ல இலாபம் பெற்று வருகிறார்கள். இப்பொழுது கட்டாயமாக சொசைட்டியில் விற்க வேண்டிய அவசியமில்லை. எப்போதேனும் இப்பொருட்களின் விலை குறைந்தபட்ச ஆதார விலைக்குக் கீழ் செல்லும்போது விலை ஆதாரத் திட்டத்தின் கீழ், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல் மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் வெளிச்சந்தை விலை அதிகரித்து வேளாண் பெருமக்கள் நலன் காக்கப்படுகிறது. விவசாயிகள் நலன் காக்க இரண்டு நடைமுறைகளும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் என்ன தவறு உள்ளது சொல்லுங்கள். அவர் தேடித் தேடிப்பார்த்தார், ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை, எனவே, இதை வைத்துக் கொண்டு போராட்டம் என்று அறிவித்துள்ளார்.

மூன்றாவது சட்டம்- அத்தியவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம், 2020 முந்தைய இரண்டு சட்டங்களின் மூலமாக கொள்முதல் மற்றும் குளிர்பதனக் கிடங்கு சேமிப்பு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும் என்பதால் அத்தியாவசியப் பொருட்கள் அவசர திருத்தச் சட்டம், 2020ல் வேளாண் விளைபொருட்களின் இருப்பு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், சமையல் எண்ணெய் வித்துக்கள் மற்றும் எண்ணெய் ஆகியவை போர், பஞ்சம், அசாதாரணமான விலை உயர்வு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற சூழ்நிலைகளில், கட்டுப்பாடுகளை விதிக்க அரசால் அரசிதழில் அறிவிக்கை செய்து, முறைப்படுத்த வழிவகை செய்யப்படுகிறது.

இச்சட்டத்தின்படி, தோட்டக்கலை விளைபொருட்களின் விலையேற்றம் 100 சதவீதத்திற்கு மிகும்போதும், வேளாண் விளைபொருட்களின் விலையேற்றம் 50 சதவீதத்திற்கு மிகும்போதும், அவற்றின் இருப்பு அளவினை நெறிமுறைப்படுத்த முடியும் என்பதாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்குவதற்கு வாய்ப்பில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.