சிறப்பு செய்திகள்

விவசாயம் பற்றி தெரிந்தால் தான் ஸ்டாலினால் பதில் சொல்ல முடியும் – முதலமைச்சர் சாட்டையடி

சென்னை

நான் விவசாயியாக இருப்பதால் வேளாண் மசோதா பற்றி எனக்கு தெரிகிறது. விவசாயம் பற்றி தெரிந்தால் தான் ஸ்டாலினால் பதில் சொல்ல முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

வேளாண் மசோதா மூலம் விவசாயி தானாக முன்வந்து ஒப்பந்தம் செய்து கொள்ளலாம், எவ்விதக் கட்டாயமும் இல்லை. பயிர் சாகுபடி மேற்கொள்வதற்கு முன்பே கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உதாரணமாக, ஒப்பந்தம் போடும்போது தக்காளியின் விலை 45 ரூபாயாக இருந்து, அறுவடை செய்யும் சமயத்தில் விலை 30 ரூபாயானால், ரூபாய் 45 விலையில் தான் தக்காளியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் விவசாயிகளை விலை வீழ்ச்சியிலிருந்து காக்க முடியும்.

விலை ஏறுகிறபொழுது குறிப்பிட்டதற்கு மேல் விலையேறினால், அந்த லாபத்தில் விவசாயிக்கு பங்கு கொடுக்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்திலே இருக்கிறது. சந்தை விலை குறைந்தாலும் ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலை விவசாயிகளுக்கு குறைவின்றி கொடுக்கப்படும். சந்தை விலையில் ஏற்றம் ஏற்படும்போது, கொள்முதலாளர் அளிக்க வேண்டிய அதிகத் தொகை மற்றும் ஊக்கத் தொகை குறித்து ஒப்பந்தம் செய்யும்போதே முடிவு செய்யப்படும்.

இதனால் விலையேற்றம் ஏற்படும்பொழுது விவசாயிகளுக்கு அதற்கேற்ற பலன் கிடைக்கும். இதில் என்ன தவறு இருக்கிறது. இந்த ஷரத்தே அவருக்கு தெரியவில்லை. விவசாயம் பற்றித் தெரிந்தால்தானே அவர் சொல்ல முடியும். நான் விவசாயியாக இருப்பதால் எனக்குத் தெரிகிறது. இந்தச் சட்டத்தின் வாயிலாக விவசாயிகள் நஷ்டம் அடைய மாட்டார்கள்.

மேலும், கொள்முதல் செய்பவர் விவசாய நிலத்தில் எவ்வித உரிமையும் கொண்டாட முடியாது. இதில் கார்ப்பரேட் நிறுவனம் வந்து விடுகிறதென்று ஒரு தவறான செய்தியை சொல்கிறார்கள். இச்சட்டத்தின் பகுதி 2, உட்பிரிவு (6)(3)(b) ஒப்பந்தத்தின்படி, விளைபொருட்களை கொள்முதல் செய்யும்பொழுதே, கொள்முதலாளர் உரிய விலையையும், அதற்கான ரசீதையும் விவசாயிக்கு அளிக்க வேண்டும். இதன்மூலம் விவசாயி உடனடியாக தன்னுடைய விளைபொருளுக்கு உரிய விலை பெறுவது உறுதி செய்யப்படுகிறது. இதில் என்ன தவறு உள்ளதென்று ஸ்டாலின் விளக்கினால் பரவாயில்லை.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.