தற்போதைய செய்திகள்

மணல்மேடு பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் மணல்மேடு பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பேரூராட்சி பொது நிதியின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தினை கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார். இ்ந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன் பி.நாயர் தலைமை வகித்தார். சிறப்பு அலுவலர்(மயிலாடுதுறை மாவட்ட உருவாக்கம்) ரா.லலிதா முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்ததாவது:-

இப்பேருந்து நிலையம் ‘சி’ கிரேடு பேருந்து நிலையமாகும். நாளொன்றுக்கு சராசரியாக 25 பேருந்துகள் வந்து செல்லும் இப்பேருந்து நிலையத்தில் 7 எண்ணிக்கையிலான பேருந்துகளை நிறுத்துவதற்கு ஏதுவாக நிறுத்தம் (Bus Bay) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பேருந்து நிலையத்தில் 8 கடைகள், பொதுமக்கள் காத்திருக்கும் பகுதி, தாய்மார்கள் பாலூட்டும் அறை, குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த புதிய பேருந்து நிலையமானது சுகாதாரமாக பராமரிக்கப்படும் வகையில் தங்களது ஒத்துழைப்பினை வழங்கி, நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

முன்னதாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் படி 5 புதிய அவசர கால ஊர்திகளை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி, மயிலாடுதுறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஷ்ணன், குத்தாலம் பேரூராட்சி செயல் அலுவலர் க.பாரதிதாசன், மாவட்ட செயல் அலுவலர்(108 ஊர்தி சேவை) பூ.பாரதிதாசன், வட்டாட்சியர் முருகானந்தம் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.