தற்போதைய செய்திகள்

பொய் பிரச்சாரத்தை முறியடித்து தி.மு.க.வை துரத்தி அடிப்போம் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சபதம்

கோவை

தமிழகத்தில் அம்மா ஆட்சி தொடர வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து அக்கட்சியை அடியோடு துரத்தி அடிப்போம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சபதம் மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை புறநகர் தெற்கு, வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் தமிழகத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்கள். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோ காலத்திலும் கூட முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகமெங்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரிடையாக சென்று ஆய்வு செய்து தேவையான திட்டங்களை தினந்தோறும் செயல்படுத்தி வருகிறார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி திட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலைகள், காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், அத்திக்கடவு-அவினாசி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தால் கோவையில் உள்ள குளங்கள் நிரம்பியுள்ளன. தொழில்துறையில் எண்ணற்ற புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கழக ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாக உள்ளது.மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வகுத்து கொடுத்துள்ள அடிச்சுவடுகளை பின்பற்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையிலான பல்வேறு சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

வருகின்ற தேர்தலில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் முக்கிய பங்காற்ற வேண்டும். வாக்களிக்க தகுதி உடைய 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களை இளைஞர், இளம்பெண்கள் பாசறை கமிட்டியில் நியமிக்க வேண்டும். பேஸ்புக், வாட்ஸ்-அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மூத்த கழக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து கழகப் பணியை ஆற்றிட வேண்டும்.

கழக அரசு செயல்படுத்திய சாதனை திட்டங்களை வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் மூலம் கொண்டு சேர்க்க வேண்டும். கழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. கழக அரசின் சாதனை திட்டங்களை பொது மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

நிறைவேற்றவே முடியாத திட்டங்களை தருவதாக பொய் பிரசாரம் செய்து கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவிற்கு அதற்கு அடுத்து நடைபெற்ற தேர்தல்களில் தமிழக மக்கள் பாடம் புகட்டி விட்டனர். அதிமுகவிற்கு மாபெரும் வெற்றியை தமிழக மக்கள் தந்தனர். உள்ளாட்சித்தேர்தலில் கோவை மாவட்டத்தில் அதிமுகவிற்கு முழுமையான வெற்றியை மக்கள் பரிசாக அளித்தனர். அனைத்து தரப்பினரின் ஆதரவு அதிமுகவிற்கு உள்ளது.கோவை மாவட்டத்திற்கு பார்த்துப் பார்த்து தினந்தோறும் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறோம். தமிழக மக்கள் நம் பக்கம் உள்ளனர். பொதுமக்களுக்கு குறைகள் இருந்தால் நிர்வாகிகள் உடனுக்குடன் கேட்டு நிறைவேற்றுங்கள்.

கடந்த காலத்தில் நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என தமிழகத்தில் திமுக கொடுங்கோல் ஆட்சியை நடத்தியது. மேலும் மின்வெட்டால் தமிழகமே இருண்டு கிடந்தது. ஆனால் கழக ஆட்சியில் மின்வெட்டு தொந்தரவு இல்லை. மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என எந்த தொந்தரவும் மக்களுக்கு இல்லாமல் அமைதிப்பூங்காவாக தமிழகம் திகழ்கிறது. நமக்கு ஒரே எதிரி திமுக. தான். வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுக மேற்கொள்ளும் பொய் பிரசாரங்களை தவிடுபொடியாக்கி அக்கட்சியை அடியோடு துரத்தியடிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இக்கூட்டத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர்கள் விசி.ஆறுகுட்டி, எட்டிமடை ஏ.சண்முகம், கஸ்தூரி வாசு, விபி.கந்தசாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் தோப்பு கா.அசோகன், கழக விவசாய பிரிவு துணை செயலாளர் ஓ.வி.ராமசந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டல செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன், மற்றும் கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.