தற்போதைய செய்திகள்

மக்களுக்காக ஆட்சி செய்யும் ஒரே இயக்கம் அ.தி.மு.க – அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு

தருமபுரி

மக்களுக்காக ஆட்சி செய்யும் ஒரே இயக்கம் அண்ணா தி.மு.க தான் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதியில் மாற்று கட்சிகளை சேர்ந்த இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அரூர் பொன்கற்பகம் திருமண்டபத்தில் நடைபெற்றஇந்நிகழ்ச்சிக்கு அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான வே.சம்பத்குமார் தலைமை வகித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி, தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கழக துணை செயலாளர் செண்பகம் சந்தோஷம், ஒன்றிய குழு தலைவர் பொன்மலர்,நகர செயலாளர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பசுபதி வரவேற்றார். நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கழகத்தில் இணைந்தவர்களுக்கு கழக கரை போட்ட வேட்டி, துண்டு அணிவித்து வரவேற்றார்.

கட்சியில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

கட்சியை இமை காப்பது போல அம்மா அவர்கள் எப்படி காப்பாற்றினாரோ அதேபோன்று இணை ஒருங்கிணைப்பாளரும், ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தி வருகிறார்கள். இன்று தகவல் தொழில்நுட்பப் பிரிவு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து கழகத்தில் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

அம்மா அவர்கள் மறைந்தாலும் அவர்கள் அறிவித்த திட்டங்கள் எதுவும் தடைபட்டது இல்லை, என்பது உங்களுக்கு தெரியும். மகளிர் குழுக்களுக்கு கடன், பணிக்குச் செல்லுகின்ற பெண்களுக்கு இருசக்கர வாகனம், மகப்பேறு உதவித்தொகை, கொரோனா காலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரிசி பருப்பு அனைத்தும் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

முதலமைச்சரால் குடிமராமத்து திட்டம் அறிவிக்கப்பட்டு வரத்துக் கால்வாய்கள் ஏரிகள் சுத்தம் செய்யப்பட்டதால் பெய்கின்ற மழை நீரை தேக்கி வைக்கின்ற அந்த சிறப்பு திட்டம் மக்களால் பாராட்டப்பட்டது. அதை போல எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு அம்மாவின் அரசு வழங்கி வருகிறது. அம்மா அறிவித்த திட்டங்கள் எதையுமே தடை இல்லாமல் தொடர்ந்து செய்து வருகிறது. அம்மாவின் வழியில் கட்சியும் ஆட்சியும் வழி நடத்திக் கொண்டிருக்கின்றதை பார்த்து மாற்று கட்சியிலிருந்து விலகி வந்து இன்று இணையக் கூடிய வகையில் அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்கு மூன்றுமுறை தமிழ்நாட்டு மக்கள் ஆளுகின்ற வாய்ப்பை தந்தார்கள். அம்மா அவர்கள் இரண்டு முறை 2011, 2016-ல் வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றார். மூன்றாவது முறையாக தாய் இல்லை என்றாலும் தாயின் மூலம் அடையாளம் காட்டப்பட்ட இருவர் இன்று ஒன்றாக இணைந்து கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு அந்த வாய்ப்பை கொடுத்து வருகின்ற 2021 தேர்தலில் மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர்ந்து புரட்சித்தலைவர் காலம் போல 3 முறை தொடர்ந்து வெற்றி பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்.

2021 பொதுத்தேர்தல் வரும் பொழுது கழகம் சார்பாக யார் போட்டியிடுகின்றார்களோ அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை தந்து இன்றைய முதலமைச்சராக இருக்க கூடியவர் துணை முதலமைச்சராக கூடியவர்கள் வருவதற்கும், உறுதுணையாக இருக்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காக ஆட்சி செய்கின்ற ஒரு இயக்கமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கழகத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களை இணைத்தது இந்த இயக்கத்திற்கு முழு பலமாகும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் எம்.பழனிச்சாமி, நல்லம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் பெரியண்ணன், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலாளர் ரவிக்குமார், நிர்வாகிகள் சாமிகண்ணு, சிவன், முன்னாள் பேரூராட்சி தலைவர் காவேரி, ஒன்றிய குழு துணை தலைவர் அருண், வஜ்ஜிரம், சின்னபொண்ணு, மணவாளன், உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் கழக சார்பு அமைப்பு நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.