ஜாதி- மதங்களை கடந்து உதவும் இயக்கம் கழகம் – கிறிஸ்துமஸ் விழாவில் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு

சென்னை
ஜாதி, மதங்களை கடந்து உதவும் இயக்கம் கழகம் என்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-
கிறிஸ்துமஸ் என்றால் அன்பு. அந்த அன்பை போதிக்க இயேசு பிரான் உலகில் பிறந்தார். அந்த அன்பை உலகிற்கு எடுத்து சொல்லும் உன்னத பண்பில் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்.
ஆகவே ஒவ்வொரு ஆண்டும், தேவன் இயேசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி அன்பு பிறந்த தினமாக கிறிஸ்துமஸ் தினமாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். ஜாதி, மதம் பார்க்காமல், முதியவர், நோய் வாய்ப்பட்டவர் என பாராமல், அனைவருக்கும் பேரன்பை வாரி வழங்கி, அவர்களுக்கு உதவி செய்யும் உன்னத பணியில் நீங்கள் ஈடுபட்டுள்ளீர்கள்.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, ஏழை, எளியவர்கள், சிறியவர்கள், பெரியவர்கள் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி மகிழ்வார்கள். கிறிஸ்துமஸ் வருகின்றது என்றாலே, அனைவருக்கும் உற்சாகம் வந்துவிடும். தங்கள் வீட்டில், விண்மீன்கள் செய்து, வண்ண விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிறுஸ்துமஸ் மரம் வைப்பார்கள். நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்வார்கள்.
டிசம்பர் 24-ந்தேதி நள்ளிரவு உலகில் உள்ள மக்கள் அமைதியுடனும், சகோதரத்துவத்துடன், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். சீசருக்கு பின்னால் என்றென்றும் துணையாக இருப்பேன், தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே கல்வியும், நவீன மருத்துவத்தையும் அறிமுகப்படுத்திய கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கு கழகம் என்றென்றும் உறுதுணையாக இருக்கும்.
ஜே.சி.டி பிரபாகரன் கூறும்போது இந்த ஆலயத்தில் 67 முதல் 107 வயது வரை உள்ளவர்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என அன்பு கட்டளையிட்டார். நானும், ஒருங்கிணைப்பாளரும், கழக முன்னோடிகளும் நிச்சயமாக நிகழ்ச்சியில் பங்கு பெறுவோம் என்று சொல்லி உங்களோடு, நாங்களும் பங்கு பெற்று மகிழ்ச்சி அடைகிறோம்.
கழகத்தை பொறுத்தவரையில் ஜாதியும் கிடையாது, மதமும் கிடையாது. அதுபோன்ற இயக்கம் தான் கழகம். ஏழைகளுக்காக உதவக் கூடிய இயக்கம். இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த கிறிஸ்தவ பள்ளியில் தான் படித்தார். ஆகவே, இந்த கிறிஸ்தவ பள்ளியில் படிக்கும் மாணவ செல்வங்கள் ஒழுக்கம் நிறைந்தவர்களாக வருவார்கள்.
எல்லோராலும் பாராட்டழு்படுகின்ற மதம் கிறிஸ்துவ மதம். இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றதற்கு, மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி
தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.