தற்போதைய செய்திகள்

கொரோனா தடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை – அமைச்சர் வேண்டுகோள்

கோவை

தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு தேவை என்று அமைச்சர் எஸ்.பி.வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அனைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்ததாவது:-

முதலமைச்சர் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய தொற்றுக்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், இந்தியாவிலேய அதிக பரிசோதனை தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 7000நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது.

மேலும், மாநகரப்பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் உள்ளவர்களை விரைவில் கண்டறிந்து அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று பரிசோதனை மேற்கொள்ள ஏதுவாக 20 நடமாடும் கொரோனா வைரஸ் பரிசோதனை வாகனங்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை வாகனங்களின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களை விரைவாக கண்டறிந்து, தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்று பரவுவதை விரைவாக கட்டுப்படுத்த முடியும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரை 11,097 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தினந்தோறும் மாநகர் மற்றும் ஊரகப்பகுதிகளில் தொடர்ந்து மருத்துவமுகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தினை உறுதிபடுத்திடவும், மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரை 3,39,089 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தற்போது வரை 27,157 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 22 ஆயிரத்து 181 நபர்கள் தற்போது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பல்வேறு நோய் தொடர்பிலிருந்த 392 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

4, 584 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக தேவைகளின் அடிப்படையில் 9,136 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்களை கொரோனா தொற்றிலிருந்து மீட்டெடுக்கும் சிறப்பு முயற்சியாக, சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதில் தற்போது 750 நபர்கள் பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பேரிடர்காலத்தில், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் 108ஆம்புலன்ஸ் சேவை அரும் பங்காற்றி வருகின்றது. இப்பணிகளுக்கு வலுசேர்க்கும் வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 12 அவசரகால ஊர்தி சேவை வழங்கியுள்ளார்கள்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் முகக்கவசம், கிருமி நாசினி திரவம் மற்றும் கைக்கழுவும் சோப்பு தயாரிக்கப்பட்டு, தூய்மைக் காவலர்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் கூடுமானவரை தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, மேற்கு மண்டல காவல்துறை துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரநாயர், மாநகராட்சி ஆணையாளர் பெ.குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்(பொ) ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, துணை இயக்குநர் (பொ) பாலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.