தற்போதைய செய்திகள்

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு முழுமையாக நிதி ஒதுக்கீடு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தருமபுரி

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் ரூ.4.42 கோடி மதிப்பில் 1344 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத திட்டங்களை தமிழக அரசு மக்கள் நலன் கருதி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் திட்டங்களான திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கனிணி, மிதிவண்டி, ஊக்கத்தொகை போன்றவை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் இல்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தற்போது முதலமைச்சர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கு முழுமையாக நிதியை தமிழக அரசு வழங்கி வருகிறது.

வீட்டுமனை இல்லாமல் யாரும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் அரசு வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி வருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு புதிய குடும்ப அட்டைகளை வழங்கி வருகிறது. வேளாண் துறை, தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தடையில்லாமல் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்திய அளவில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறப்பு சதவீதம் குறைந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மக்கள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அரசின் வழிகாட்டுதலோடு கொரோனா தடுப்பு பணிகளை தருமபுரி மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்திய காரணத்தால் கொரோனா பாதிப்பு குறைவாக காணப்படுகிறது. தமிழக அரசு பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் அரசு கூறும் வழிமுறைகளை கடைபிடித்தால் தொற்று பரவுவதை தடுக்க இயலும்

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், சார் ஆட்சியர் மு.பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் விஸ்வநாதன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இளவரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)(பொறுப்பு) கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஆ.தணிகாசலம், வட்டாட்சியர் கற்பகவடிவு, பார்வதி, ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கணேசன், ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.