தற்போதைய செய்திகள்

நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்கும் தகுதி கழகத்துக்கு மட்டுமே உண்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முழக்கம்

கோவை

மக்களுக்காக என்றும் உழைக்கும் கழகத்துக்கு மட்டுமே நெஞ்சை நிமிர்த்தி ஓட்டு கேட்கும் தகுதி உண்டு என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு தொகுதி மலுமாச்சம்பட்டியில் கழக கொடியேற்றி, ஒன்றிய கழக அலுவலகத்தை கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.வெங்கடாசலம், பேரூராட்சி கழக செயலாளர் கே.சண்முகராஜா, ஒன்றிய கழகச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலிருந்து கழகத்தின் கோட்டையாக கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி திகழ்கிறது. கிணத்துக்கடவு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களுக்காக பார்த்து பார்த்து எண்ணற்ற திட்டங்களை தினந்தோறும் நிறைவேற்றி வருகிறோம்.

மக்களுக்காக என்றுமே பணியாற்றுபவர்கள் அதிமுகவினர் மட்டுமே. நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஓட்டு கேட்க நமக்கு மட்டுமே தகுதி உண்டு. அதற்கு இந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சாதனை திட்டங்களே சான்றாக உள்ளது.
ஆகவே நூறாண்டு காலம் ஆனாலும் கழகமும், கழக ஆட்சியும் நீடிக்கும் என்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வாக்கை மெய்ப்பிக்கும் கழகத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்து ஒற்றுமையாக கழகப் பணியாற்றுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிரணி மாவட்ட செயலாளர் கண்ணம்மாள், மண்டல போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் சிடிசி சின்ராஜ், மதுக்கரை ஒன்றிய பெருந்தலைவர் உதயகுமாரி பாலசண்முகம், கழக நிர்வாகிகள் திருமலைசாமி, சண்முகம், மாணிக்கவாசகம், சாமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.