தற்போதைய செய்திகள்

ஆரணிக்கு விரைவில் காவேரி குடிதண்ணீர் – அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேட்டி

திருவண்ணாமலை

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தினால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு குடிநீர் வரவுள்ள நிலையில் இருந்த திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டது. வேலூர் மாவட்டத்திற்கு ஒகேனேக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் ஆரணி பயனடையும் என்ற திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்த நிலையில் ஆரணி சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் இத்திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தற்போது வேலூர் மாவட்டத்தில் குடிநீர் திட்டம் செயல்படவுள்ள நிலையில் ஆரணிக்கும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வேலூர் மாவட்டம் முழுவதும் செல்லும் பாதையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் பைப் லைன் இணைக்கப்பட்டு ஆரணிக்கு காவேரி நீர் வரவுள்ளது. அமைச்சரின் தொடர் முயற்சியால் ஆரணி பொதுமக்களுக்கு விரைவில் காவிரி குடிநீர் கிடைக்கவுள்ளது. தினமும் 20 லட்சம் லிட்டர் காவேரி தண்ணீர் வழங்க ஆணை வந்துள்ளது. ஆரணிக்கு சுமார் 55 லட்சம் குடிநீர் தேவைப்படும் நிலையில் தற்போது ஆரணியிலிருந்து 35 லட்சம் லிட்டர் தண்ணீர் தரப்படுகிறது. மேலும் கூடுதலாக காவேரி தண்ணீர் 20 லட்சம் லிட்டர்வந்தால் ஆரணி மக்களின் குடிநீர் பிரச்சினை முழுவதும் தீர்ந்து விடும். மேலும் 20 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை ஆரணி மக்களுக்கு வராது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திமுகவினர் ஒவ்வொரு முறையும் ஆரணிக்கு ஒகேனக்கல் குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என கூறுவார்கள். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் நான் காவேரி தண்ணீர் ஆரணி மக்களுக்கு தர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தேன். அதன்படி ஆரணிக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் தர சென்னை நகராட்சி நிர்வாகத்திடமிருந்து ஆணை வந்துள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் ஆற்காட்டில் பைப் இணைப்பு பணிகள் முடிந்ததும் ஆரணி மக்களுக்கு காவேரி தண்ணீர் கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.

முன்னதாக மேற்கண்ட ஆணையினை சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் கே.பாஸ்கரன் ஆரணி நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார்.