தற்போதைய செய்திகள்

கால்நடை பராமரிப்பு துறை மேம்பாட்டுக்கு ரூ.1140 கோடி நிதி தேவை – மத்திய அமைச்சரிடம், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதுடெல்லி

புதுடெல்லியில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்தறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் சஞ்சீவ்குமார் பால்யான் ஆகியோரை நேற்று சந்தித்து கால்நடை பராமரிப்புத்துறையின் உள் கட்டமைப்பு தேவைகளை மேம்படுத்திட ரூ.1140 கோடி நிதி வழங்குமாறு கோரினார்.

சேலம் மாவட்டம் தலைவாசல், தேனி மாவட்டம் வீரபாண்டி மற்றும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் புதிதாக கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் தொடங்குவதற்கு முதலமைச்சர் அனுமதி அளித்துள்ள நிலையில் இதற்கென ரூ.750 கோடி நிதி தேவைப்படும் எனவும், இதற்கான மத்திய அரசின் பங்களிப்பான 60 சதவீதம் தொகையான ரூ.500 கோடி நிதி வழங்கிட மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில் அத்தொகையையும் மேலும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களுக்கு ரூ.209.63 கோடியையும் வழங்க மத்திய அரசிடம் நிதி உதவி கோரினார்.

தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீட்டினை அளிக்குமாறு கோரினர்.

மேலும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளை எடுத்துரைத்தார். மேலும் தேசிய கால்நடை இயக்கத்தின் மாநில அளவிலான செயற்குழுவால் ஒப்பளிக்கப்பட்ட ரூ.69.99 கோடியில் உள்ளடக்கிய மத்திய அரசு பங்கான ரூ.35.98 கோடி மதிப்பிலான திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மத்திய அரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தமிழகம் கோரிய முழு தொகையையும் மத்திய அரசு வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கால்நடைகளை நோய்களின் தாக்கத்திலிருந்து தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார்.

மத்திய அரசு உதவி பெறும் திட்டமான கால்நடை நலன் மற்றும் நோய் தடுப்பின் கீழ்
மத்திய அரசின் பங்கான ரூ.4.32 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். மாநிலத்தில்
கோழியினங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு புதிய 3+ தரம் கொண்ட உயிரியல் பாதுகாப்பு
ஆய்வகம்(BSL 3+) தமிழகக்தில் நிறுவிட வேண்டியதன் அவசியத்தினை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி இதற்கென ரூ.103.45 கோடி நிதியினை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், மாநிலத்தில் கோமாரி நோய் தடுப்பு பணியை தடையின்றி செயல்படுத்திட தேவையான கோமாரி நோய் தடுப்பூசி தங்குதடையின்றி கிடைக்க ஏதுவாக, கோமாரி நோய் தடுப்பூசி உற்பத்தி ஆய்வகத்தினை ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் ரூ.278.87 கோடியில் நிறுவ மத்திய அரசிடம் கோரினார். கால்நடைகளில் இனப்பெருக்கத்தினை அதிகரிக்க எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் விளக்கினார்.

அகில இந்தியாவில் தமிழகம் செயற்கை முறை கருவூட்டல் பணியில் முதன்மை மாநிலமாக திகழ்வதால் கால்நடைகள், எருமைகளின் மரபணு ரகுதியை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களுக்கான கருத்துகளையும் சேர்த்து, ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் கீழ் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் கூடுதல் திட்டங்களுக்கு ரூ.64.54 கோடி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மீலம் கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் இனப் பெருக்கத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் ரூ.69.92 கோடியில் தாது உப்பு கலவை உற்பத்தி ஆலையை நிறுவவும், ரூ.87.33 கோடியில் உறைவிந்து உற்பத்தி நிலையத்தினை வலுப்படுத்தவும் நிதி உதவி வழங்குமாறு கோரினார். இத்துடன் கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் கிடைக்க வழிவகை செய்து அதன் மூலம் கால்நடைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்திட முழுமையான கலப்பு தீவன ஆலையை ரூ.2.54 கோடியில் நிறுவ மத்திய அரசிடம் நிதி கோரினார்.

மேலும் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கால்நடை நிலையங்களின் மேம்படுத்தப்பட்ட உள் கட்டமைப்பு தேவைகளை எடுத்துரைத்து புதிய கால்நடை காப்பிடங்கள் கட்டவும், ரூ.311.32 கோடி வழங்க கேட்டுக்கொண்டார். மேலும் கால்நடை நிலையங்களில் நோய் கண்டறிதல் வசதிகளை மேம்படுத்த, மேல்நிலை ஒலிக்கருவி, கணினி மயக்கப்பட்ட ஊடுகதிர் கருவி மற்றும் சூட்டுக்கோல் வழங்க ரூ.15.50 கோடியும், கால்நடைகளுக்கான மருந்துகளை சேமிக்கும் பொருட்டு மண்டல அளவிலான சேமிப்பு கிடங்குகள் நிறுவ ரூ.63.47 கோடி வழங்க மத்திய அரசிடம் கோரினார்.

தமிழகத்தின் நாட்டுக்கோழி கறியின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு தீவன ஆலை, கோழிக்குஞ்சு பொறிப்பகம் மற்றும் இறைச்சி கூடம் உள்ளடக்கி நவீன மயமாக்கப்பட்ட நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை ரூ.102.76 கோடியில் அமைக்க அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கோரினார்.

இவை அனைத்தையும் உள்ளடக்கிய கோரிக்கை மனுவை அமைச்சர் உடுமலை கே.ரதாகிருஷ்ணன் மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரிடம் வழங்கினார். அப்போது தமிழ்நாடு அரசின் காலநடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் உடனிருந்தார்.