சிறப்பு செய்திகள்

10, 11, 12-ம் வகுப்புகள் 1-ந்தேதி முதல் தொடங்க தமிழக அரசு அனுமதி

சென்னை

வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலோடு பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 23-ந்தேதி முதல் பள்ளிகள் கல்லுாரிகள் மூடப்பட்டன.

அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 29-ந்தேதி மத்திய அரசின் உள்துறை ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது. அதனை தொடர்ந்து 50 சதவீத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், பள்ளிகளுக்கு வந்து பணியாற்றலாம் என்றும் ஆன்லைன் மூலமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கலாம் என்று தெரிவித்தது. இந்த உத்தரவு கடந்த 21-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நோய்த்தொற்று மண்டலங்களில் இந்த உத்தரவுக்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் கடந்த செப்டம்பர் 8-ந்தேதி வெளியிட்ட உத்தரவில் பள்ளிகளில் பகுதி நேரமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், தாங்களாக முன் வந்து ஆசிரியர்களிடம் தங்களுக்கு எழும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் விருப்பத்தின் அடிப்படையில் வரும் மாணவர்களை கொண்டு வரும் அக்டோபர் 1-ம்தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்றும் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை பரிந்துரையொன்றை வழங்கியது. அதில் வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் ஆசிரியர்கள் வழிகாட்டுதல் அடிப்படையில் மாணவர்கள் தாங்களாக முன்வரும் பட்சத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் தங்களது சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக அக்டோபர் 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

அதைப் பரிசீலித்த மாநில அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளின் 10-12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி அளிக்கிறது. வரும் அக்டோபர் 1-ந்தேதி முதல் ஏற்கெனவே, மத்திய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைமுறைப்படுத்தப்படும். இது நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பொருந்தாது. மற்ற இடங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.