கழகம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு

சென்னை
சென்னை சேத்துப்பட்டு முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர்.
கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் ஒப்புதலோடு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிரந்தர பொதுச்செயலாளர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடி வந்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, கழகத்தின் சார்பில் நேற்று சென்னை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, துவக்க ஜெபம் நிகழ்த்தப்பட்டது. பின்னர், கழக ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கிறிஸ்துமஸ் கேக்கினை வெட்டி அனைவருக்கும் வழங்கி, கிறிஸ்துமஸ் வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.
தொடர்ந்து, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர், ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்திற்கு இரண்டு வீல் சேர், எலக்ட்ரானிக் காட் முதலானவற்றை வழங்கினர்கள். மேலும், ஹார்லிக்ஸ் பாட்டல், டவல், பேஸ்ட், பிரஷ், எண்ணெய், சோப்பு மற்றும் இதர பொருட்கள் உள்ளடக்கிய பை 170 பேருக்கு வழங்கினார்கள்.
அதனைத்தொடர்ந்து, அந்த இல்லத்தில் உள்ள முதியோர்கள், சகோதரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மதிய உணவை வழங்கினார்கள். கழகத்தின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், கிறிஸ்தவப் பெரியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இவ்வாறு தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.