சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

சென்னையில் அகில இந்திய சித்த மருத்துவ கழகம் – பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் கடிதம்

சென்னை

இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யோகா, யுனானி, இயற்கை மருத்துவம் ஆகியவற்றுக்கு தங்களது தலைமையிலான மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலையில், அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரத்தில், சித்த மருத்துவ கழகத்தை நடப்பு நிதியாண்டிலேயே தமிழகத்தில் அமைக்க வேண்டுமென தங்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.

சித்த மருத்துவ அமைப்பு உருவான இடமாகத் திகழும் தமிழகத்தில், மருத்துவ கழகத்தை அமைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். சென்னை நகருக்கு அருகிலேயே அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தை அமைப்பதற்கான நல்ல சுத்தமான காற்று, ரயில் மற்றும் சாலை வசதி ஆகியவற்றுடன் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இதுதொடர்பாக, மத்திய அரசு கேட்கும் அனைத்து விவரங்களையும் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுகுறித்த விவரங்கள் அனைத்தும் மத்திய அரசுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

தமிழகத்தில் அகில இந்திய சித்த மருத்துவ கழகத்தை அமைப்பதற்கு நான் மிகுந்த விருப்பமாக இருக்கிறேன் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். எனவே மத்திய அரசிடம் இருந்து சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.