தற்போதைய செய்திகள்

புரதம், சிறுதானிய உணவளிப்பதன் மூலம் இளைஞர் நலன் காக்கப்படும் – துணைத்தலைவர் சி.பொன்னையன் தகவல்

சென்னை

புரதம் மற்றும் சிறுதானிய உணவுகளை அளிப்பதன் மூலம் இளைஞர்களின் நலன் காக்கப்படும் என்று மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவர் சி.பொன்னையன் தெரிவித்தார்.

நாட்டின் வலிமைக்கான தூண்களாகவே இளைஞர்கள் விளங்குகின்றனர். சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வருவதில் இளைஞர்கள் பல நேரங்களில் முக்கிய பங்காற்றுகின்றனர். இளைஞர்களது சீரிய வளர்ச்சி வலுவான சமுதாயத்துக்கு இட்டுச்செல்வதுடன், நாட்டின் எதிர்காலத்தையும் கட்டமைக்கிறது. எனவே, சமுதாய செயல்பாடுகள் மற்றும் நாட்டின் கட்டமைப்புக்கு இளைஞர்களை ஈடுபடுத்துதல் அவசியமாகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு “தமிழ்நாடு மாநில இளைஞர் கொள்கை 2017 செயலாக்கம் குறித்த வலைதள கருத்தரங்கு மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் சி.பொன்னையன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்று பேசுகையில், இளைஞர் நலன் காக்க தமிழக அரசு எடுத்து வரும் சீரிய திட்டங்கள் பற்றி விரிவாக கூறினார். தமிழக அரசு ஏற்படுத்தி வரும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளான பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கங்கள், ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையம், மதுரை, நவீன உடற்பயிற்சி மையங்கள் பற்றியும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கி கூறினார்.

அதன்பின்னர் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத்தலைவர் சி.பொன்னையன் பேசும் போது ஊரகப் பகுதிகளில் விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துதல் பற்றி எடுத்துரைத்தார். மேலும், இளைஞர்களின் நலன் அவர்களின் ஊட்டச்சத்து உணவு பழக்கத்தால் அமைகிறது எனவும், புரதம் மற்றும் சிறுதானிய அடிப்படையிலான உணவுகளை அவர்களுக்கு அளிப்பதன் மூலம் அவர்தம் நலன் காக்கப்பட்டு சிறப்பான குடிமக்களாக சமுதாய முன்னேற்றத்தில் பங்கு எடுக்க வைக்க முடியும் என்று தெரிவித்தார். இளைஞர்களிடையே திறன் மேம்பாடு மற்றும் அறிவு மேலாண்மையின் அவசியம் பற்றி மாநில வளர்ச்சிக் குழுவின் உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம் எடுத்துரைத்தார்.