தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு முதலில் குரல் கொடுக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர்

விவசாயிகளுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அம்மா அரசு தான் முதலில் குரல் கொடுக்கும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழகாவாதுகுடி ஊராட்சியில் அம்மா நகரும் நியாய விலை கடை சேவையை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ரேஷன் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் நியாய விலை பொருட்கள் வழங்கப்படும். வேறு எந்தவித காரணமும் கூறி அவர்களுக்கான பொருட்கள் வழங்குவது தட்டிக் கழிக்கப்படாது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதா ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே இடைத்தரகர்களிடம் விவசாயிகள் ஏமாறக்கூடாது என்பதற்காகவே வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு பிரச்சினை என்றால் அதற்கு முதல் குரல் கொடுக்கின்ற அரசு அம்மாவினுடைய அரசாகத்தான் இருக்கும். பயோமெட்ரிக் முறையில் யாரும் தங்களுடைய பொருளை பெறுவதில் எந்தவித சிக்கலும் ஏற்படாத வண்ணம் திட்டம் செயல்படுத்தப்படும்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கலாம். ஆனால் ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு தெரிவிக்கக் கூடாது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசை பாரத பிரதமர் வெகுவாக பாராட்டியுள்ளார். 90 சதவீத மக்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். ஊழல் குறித்து ஆதாரத்துடன் தெரிவித்தால் அதை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ஜெயராமன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.