தற்போதைய செய்திகள்

தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடியில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவை

கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் அம்மா நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலை கடைகளின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க சிறப்பான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காலத்தில் ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சரின் உத்தரவின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிதியுதவி வழங்குவதற்கான டோக்கன்கள் வீடுகள் தோறும் சென்று வழங்கப்பட்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ‘பல்வேறு தரப்பிலிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு 3,501 அம்மா நகரும் நியாய விலை கடைகள் ரூ.9.66 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அவர்களது குடியிருப்புகளுக்கு அருகிலேயே சென்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிட ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 அம்மா நகரும் நியாயவிலை கடைகளின் சேவையை தொடங்கி வைக்கும் அடையாளமாக 7 அம்மா நகரும் நியாயவிலை கடைகளின் வாகனங்களை முதலமைச்சர் கடந்த 21-ந் தேதி தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் மாரியம்மன் கோவில் அருகிலுள்ள நியாயவிலை கடையில் அம்மா நகரும் நியாயவிலை கடை வாகனம் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் நியாயவிலை கடைகள் மூலம் மாதம் ஒருமுறை குடும்ப அட்டைதாரர்களுக்கு வசதியாக அரசால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில், கடையின் விற்பனையாளர் நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வார். இதன்மூலம் மலை கிராமங்களில் வசித்து வரும் மக்களுக்கு மாதா மாதம் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி அவர்களின் இருப்பிடத்திலே கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

முன்னதாக தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி, தார்சாலை அமைக்கும் பணி, குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்யும் பணி, அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணி, நியாயவிலை கட்டடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். மேலும் தொண்டாமுத்தூர் பேரூராட்சி 5-வது வார்டு நரசீபுரம் ரோட்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் அமைச்சர் திறந்து வைத்தார்.