தற்போதைய செய்திகள்

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி – அமைச்சர்கள் பி.தங்கமணி தகவல்

நாமக்கல்,

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும் விரைவில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசு துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு அரசின் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

இதன்படி பள்ளிபாளையம் அடுத்துள்ள வெள்ளிகுட்டை மற்றும் வெள்ளைபாறை ஆகிய இடங்களில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை வாகனம் மூலம் பொருட்கள் விற்பனையை அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 250 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனங்களை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினர்.

இதேபோல பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ்ரே கருவி மற்றும் சௌதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடங்களையும் ரூ.10 லட்சம் மதிப்பில் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பயன்பாட்டிற்கு அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து குமாரபாளையம் கூட்டுறவு வங்கி கூடுதல் கட்டடத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழகத்தைப் பொறுத்தவரை மின்சார உற்பத்தி தேவைக்கு அதிகமாகவே உள்ளதால், மின்மிகை மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வரவுள்ள மின்சார வாகன திட்டங்கள் தமிழகத்தில் நடைமுறைக்கு வரும்போது, எந்தவிதத் தடையுமில்லாமல், முதல்வரின் அறிவுரைப்படி அத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால், மின் பற்றாக்குறை என்பது ஏற்படாது.

தமிழகத்தில் தட்கல் முறை மற்றும் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் இணைப்பு அளிப்பதற்கு விண்ணப்பம் பெறும் பணிகள் நேற்று முதல் தொடங்கப்பட்டு, மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு முதல் தட்கல் இணைப்பு அதிகரித்து இருப்பதால், இத்திட்டத்திற்கு விவசாயிகளிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. ஓசூர் உள்ளிட்ட மின்வாரிய அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு மட்டும் 200-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்பு கொண்டு மனுக்களைப் பெற்று வருகிறார்கள். அந்தந்த பகுதிக்கு ஒதுக்கீட்டிற்கு அளவிற்கு ஏற்ப இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும். இதில், எந்தவிதமான தவறும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கிடைக்கும்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பள்ளிபாளையம் பகுதிகளிலும், ஈரோடு மாவட்டத்திலும், காவிரி ஆற்றுப் பகுதிகளில் தேசிய பசுமை தீர்ப்பாய உறுப்பினர்கள் கடந்த 2 நாள்களாக ஆய்வு செய்துள்ளனர். காவிரி ஆற்றில் சாக்கடை கழிவு மற்றும் சாயக்கழிவு ஆற்றில் கலக்க கூடாது என்பதற்காக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சாய ஆலைகளுக்கு உரிய நிரந்தர தீர்வு காண்பதற்காக, நாமக்கல் மாவட்டம் உள்பட 6 மாவட்டங்களுக்கு அந்தந்த பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க புரட்சித்தலைவி அம்மா அவர்கள், ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். நாமக்கல் மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு இருக்கின்ற ஆலை உரிமையாளர்கள், பொது சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வதில் காலதாமதம் ஆனது. தற்போது, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான அனுமதி கோரி மத்திய அரசிடம் மனு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி வந்தவுடன் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும்.

நாமக்கல் மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் தேவைப்படுவதால் பிற மாவட்டங்களிலிருந்தும் கோரப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் மாநகராட்சி பகுதிகளில் புதைவட மின்சார வயர்கள் அமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நகராட்சி அளவில் தமிழகத்திலேயே முதன்முறையாக ரூ.200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று, 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இதனால் இன்னும் இரண்டு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்.

டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளில் வசூலாகும் பணத்தை கொண்டு செல்லும்போது கொள்ளையை தடுப்பதற்காக பரீட்சார்த்தமாக தமிழகத்தில் நான்கு கடைகளில் பாதுகாப்பு பெட்டக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் வசூலாகும் தொகையை பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்கான அந்த வசதி விரைவில் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ், குமாரபாளையம் வட்டாட்சியர் ம.தங்கம், பள்ளிபாளையம் ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான எஸ்.செந்தில், அரசு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.