தற்போதைய செய்திகள்

தமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெருமிதம்

கரூர்

தமிழக விவசாயிகள் நலன் காக்க கழக ஆட்சியில் ஏராள திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், பஞ்சமாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் பஞ்சமாதேவியிலிருந்து 2 கி.மீ. தூரத்திலுள்ள சங்கராம்பாளையத்தில் வசிக்கும் 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்கள் வசிக்கும் இருப்பிடத்திலேயே பொருட்கள் வழங்கும் வகையில் ‘அம்மா நகரும் நியாயவிலைக்கடை” வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முகாமை துவக்கி வைத்து 33 விவசாயிகளுக்கு ரூ.61.52 லட்சம் மதிப்பிலான பயிர்க்கடனுதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தாவது:-

கடந்த பத்தாண்டுகளில் அம்மாவின் அரசு அதிகளவில் நியாயவிலைக்கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது. 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ள கடைகளில் 150 குடும்ப அட்டைகளை பிரித்து பகுதிநேர நியாயவிலை கடைகளாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் குடும்ப அட்டைகள் சேதாரம் எற்படாத வண்ணம் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.100 ரொக்கத்தை புரட்சித்தலைவி அம்மா வழங்கினார். அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ரொக்கத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக வழங்கி வருகின்றார்.

கிராமப்புறங்களில் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்கள் விவரம் தெரியாமல் சர்க்கரை வாங்கும் குடும்பட்டையை பெற்றுவிடுகின்றனர். அதன் காரணமாக அவர்களால் பொங்கல் பரிசு பெற முடியாத சூழ்நிலை எற்பட்டபோது அதனை பச்சைநிறம் கொண்ட அரிசி அட்டைகளாக மாற்றி கொள்ள முதலமைச்சர் குறிப்பிட்ட கால அளவை நிர்ணயித்து அதனை மாற்றி கொள்ள வாய்ப்பளித்தார். அதன்படி, கரூர் மாவட்டத்தில் 12,000 குடும்பட்டைகள் மாற்றப்பட்டு அரிசி அட்டைகளாக மாற்றப்பட்டு அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் அம்மா மருந்தகங்களில் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் உயிர்காக்கும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு தமிழகத்திலேயே கரூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த முதலமைச்சர் தமிழ்நாட்டில் மாபெரும் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தும் வகையில் ஏரி, குளம், வாய்கால்கள், வரத்துவாரிகள் அனைத்தையம் தூர்வார குடிமராமத்து திட்டம் என்ற பொன்னான திட்டத்தை செயல்டுத்தி அனைத்து நீர்வழித்தடங்களும் புனரமைக்கப்பட்டு மழைக்காலங்களில் பெறப்படும் தண்ணீர் வீணாகமல் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயிகள் பயனடையும் வகையில் செய்து குடிமராமத்து நாயகனாக திகழ்ந்து வருகிறார்.

கரூர் மாவட்டத்தில் பள்ளபாளையம்-ராஜவாய்க்கால், ஆணைப்பாளையம் முதல் கோயம்பள்ளி-செல்லிபாளையம் வரை தூர்வாரப்பட்டு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காவேரி ஆற்றில் இணைந்துள்ள 5 வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டுள்ளது. காவேரி நீரேற்று பாசனம் மூலம் விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் சங்கம் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பயிர்கடன் சார்ந்த நகை கடன்களுக்கு உரிய காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வரும் சிறப்பான அரசாக புரட்சித்தலைவி அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது. வறட்சி, புயல், வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்கள் எற்பட்டபோதும் கேரளாவிலிருந்து முல்லை பெரியாறு பிரச்சனை, ஆந்திராவிலிருந்து பாலாறு பிரச்சனை, கர்நாடகாவிலிருந்து காவேரி பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டபோதிலும் தமிழக அரசு தொடர்ந்து 5 ஆண்டுகளாக உணவு உற்பத்தியில் முதலிடம் பெற்று மத்திய அரசின் கிரிஷி சமான் விருதை பெற்றுள்ளது அம்மாவின் அரசு.

வறட்சி காலத்திலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், வறட்சி நிவாரணத்தை அம்மாவின் அரசு வழங்கி வருகிறது. பயிர்காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்த போதிலும் காப்பீட்டு தொகையினை தமிழக அரசு செலுத்தி விவசாயிகளை பாதுகாத்து வருகிறது. 2016ம் ஆண்டு தமிழக அரசு ரூ.5,318 கோடி விவசாய கடன்களை மாநில அளவில் தள்ளுபடி செய்தது.

அதில் கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.130 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு 100 விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானிய விலையில் உழவு இயந்திரங்கள் (டிராக்டர்) பெற்றுள்ளனர். இதன் மூலம் ரூ.6 லட்சம் மதிப்பிலான உழவு இயந்திரம் வாங்குவதற்கு 50 சதவீத மானிய உதவிதொகையாக தலா ரூ.3 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 30 உழவு இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலக்கட்டத்தில் இதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான 3,600 டன் மெட்ரிக் உரம், ரூ.7 லட்சம் மதிப்பில் 18 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக முதலமைச்சரின் தலைமையிலான அரசு திகழ்கிறது.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.