தற்போதைய செய்திகள்

அரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்

தருமபுரி

அரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை விரட்டுவோம் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சியில், ரூ.25 லட்சம் மதிப்பில் காரிமங்கலம் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு மற்றும் கிராம நிர்வாக அலுவலக மற்றும் காரிமங்கலம் சாவடியில் புதிய பல்நோக்கு சமுதாய கட்டிடம், கொட்டுமாரன அள்ளி ஊராட்சி அத்தனூர் கிராமத்தில் ரூ.8.5 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் ஆகிய 2 புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாய கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம், புதிய தார்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட 3 புதிய திட்டப்பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்ததாவது:-

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2017-18-ம் ஆண்டின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பில் ஜக்கசமுத்திரம் ஊராட்சி ஜே.பந்தாரஅள்ளி கிராமத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம், CGF- திட்டத்தின் மூலம் 2019-20-ம் ஆண்டின் கீழ் ரூ.38 லட்சம் மதிப்பில் காரிமங்கலம் ஒன்றியம் ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் முருக்கல்நத்தம் முதல் சாமியார்கொட்டாய் வரை புதிய தார் சாலை அமைக்கும் பணி,

ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்ட(SCPAR) 2019-20-ம் ஆண்டில் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பில், போடரஅள்ளி கிராமத்தில் புதிய சமுதாய கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் கட்டுதல் என மொத்தம் 3 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்படுகிறது. தற்போது தொடங்கும் அனைத்து வளர்ச்சிப்பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். தமிழக அரசு கடைகோடி மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

மேலும் தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஆரம்ப காலத்தில் குறைவாக இருந்தாலும் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சமில்லாமல் அரசின் விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். நான் கொரோனா தொற்றால் பாதித்தவன் என்ற முறையில் கூறுகிறேன்.

கொரோனாவை விரட்டியடிக்க பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களையும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளையும் பின்பற்றி கொரோனா தொற்றை தடுக்க வேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிப்பது, அவசியம் முகக்கவசம் அணிவது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது உள்ளிட்ட நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஆ.தணிகாசலம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் ரவிசங்கர், ஒன்றியக்குழுத்தலைவர்கள் பாஞ்சாலை கோபால், சாந்தி பெரியண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் காவேரி, மாவட்ட அறங்காவல் குழுத்தலைவர் கே.வி.அரங்கநாதன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கண்ணன், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் செல்வராஜ், வீரமணி, கோவிந்தசாமி, வட்டாட்சியர் கலைச்செல்வி, பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.