தற்போதைய செய்திகள்

நன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடி மதிப்பில் மேம்பாடு – அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் ஆய்வு

திருவாரூர்

நன்னிலம் பேருந்து நிலையம் ரூ.3. கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது இப்பணிகளை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் மூலதன மான்ய நிதி திட்டத்தின்கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நன்னிலம் பேருந்துநிலையம் மேம்பாடு செய்தல் பணி மற்றும் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் நல்லமாங்குடி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகிய கட்டுமான பணியினை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் உடனிருந்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முழுவதும் தனது முழு கவனத்தையும் செலுத்தி சிறப்பாக பணியாற்றி கொரோனா தொற்று நோயை தமிழகத்திலிருந்து விரைவில் அகற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் தொடர்ந்து எடுத்து வருகிறார். அதன் வெளிப்பாடாக தான் பாரத பிரதமர் தமிழ்நாடு கொரோனா தடுப்பு பணியை பாராட்டியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்னுதாரணமான மாநிலமாக செயல்படுகிறது. தமிழக முதல்வர். துணை முதல்வர், அமைச்சர்கள், மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக பணியாற்றுவதன் விளைவாக இந்த இலக்கை நாம் அடைந்துள்ளோம்.

திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 6630. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் 85 சதவீத மக்கள் சிகிச்சை பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்பொழுது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 755. அதிலும் 30 நபர்கள் மட்டுமே ஆக்ஸிஜன் உதவியோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பான முறையில் நோய் தடுப்பு நடவடிக்கைள் செயல்படுத்தபட்டு வருகிறது.

இந்த கொரோனா காலத்திலும் மக்களுக்கு தேவையான வளர்ச்சித் திட்டப்பணிகள் தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல்வர் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்வதற்கு ஆணையிட்டுள்ளார். அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நன்னிலம் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நன்னிலம் பேருந்து நிலையம் நவீன மயமாக்குவதற்கு முதல்வரால் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 24 வணிக வளாக கடைகளும், ஒரு உணவகம், இரண்டு பயணிகள் காத்திருப்பு கூடம், 10 பேருந்து நிறுத்துமிடம், இலவச சிறுநீர் கழிப்பிட வசதி, 200 மீட்டர் சுற்று சுவர், மற்றும் 42,000 சதுரடியில் பேருந்து நிலையத்தின் பரப்பளவு தார்தளம் அமைத்து விரிவுபடுத்துதல் பணிகள் மேலும், நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட நல்லமாங்குடி பகுதிகயில் பொதுமக்களின் நலன் கருதி ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.

மேலும் நெல்கொள்முதலை பொறுத்தவரை நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறந்த நாள் முதல் இதுவரை இல்லாத அளவு சாதனை அளவாக புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் ஆட்சி செய்திடும் முதல்வர் அளித்த ஆக்கமும், ஊக்கத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாத்திற்குள்ளே விவசாயிகளுக்கு எந்தவித பிரச்சினையுமின்றியும் 31 லட்சத்து 61 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

இவ்ஆய்வின் போது திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ஆசைமணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், நன்னிலம் செயல் அலுவலர் ராஜசேகர், நன்னிலம் ஒன்றிய குழு உறுப்பினர் இராம குணசேகரன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பக்கிரிசாமி, நன்னிலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், நன்னிலம் பேரூராட்சி மேலாளர் ரவி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.