தற்போதைய செய்திகள்

கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க பிரத்யேக ஏற்பாடு – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை

முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

கோயம்புத்தூர் மாவட்டம் சென்னைக்கு அடுத்தபடியான தொழில் வளர்ச்சியிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் பெரிய மாவட்டமாக உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இறப்பு சதவிகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.

தமிழ்நாடு அரசு, மக்கள் நலன் சார்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அரசின் விதிமுறைகளையும், மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளையும் பின்பற்றிட வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் அனைத்து துறை அலுவலர்களும் முழு அர்ப்பணிப்புடன் சிறப்பாக பணியாற்றி வருகின்றார்கள்.

தமிழகத்தில் முதன்முறையாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா குறித்து பரிசோதனை மேற்கொள்ள 5000 மருத்துவ முகாம்கள் நடத்திட சுகாதாரப் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, தினந்தோறும் மாநகராட்சி பகுதிகளில் 100 முகாம்களும், ஊரகப்பகுதிகளில் 58 முகாம்கள் என ஒவ்வொரு நாளும் 158 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், முதலமைச்சரின் அறிவுரைப்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ சிகிச்சை முறையில் கபசுர குடிநீர் சூரணம், மூலிகை குடிநீர், இயற்கையான சத்து பானங்கள், சித்தா மாத்திரைகள் மற்றும் அனைத்து வகையான சத்துக்களும் அடங்கிய சரிவிகித உணவுகள் அளிக்கப்படுகின்றது. இவற்றுடன் யோகா உடற்பயிற்சி போன்ற மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றது.

கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையானது கொரோனா சிகிச்சை அளிக்கும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாகும். இம்மருத்துவமனையில், கோயம்புத்தூர் மாவட்டம் மட்டுமல்லாது திருப்பூர், நீலகிரி மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டினை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில், 149 மருத்துவர்கள், 146 செவிலியர்கள், 268 பணியாளர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதுவரை 80,623 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், (15.07.2020) வரை 1,591 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 930 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதுவரை 11 நபர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

தற்போது 650 நபர்கள் சிகிச்சையில் உள்ள நிலையில் 228 நபர்கள் இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 139 நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மற்றும் மேட்டுபாளையம் அரசு மருத்துவமனையிலும் தலா 1 நபரும் கொடிசியா சிகிச்சை மையத்தில் 236 நபர்களும், பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 4 நபர்களும், என்.எம் ஹோம் சிகிச்சை மையத்தில் 5 நபர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மனமகிழச்சியினை ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சி, கேரம்போர்டு, போன்ற உள் விளையாட்டுகள் மற்றும் தொலைக்காட்சி வசதி போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று வேளை சுகாதாரமான உணவுடன், பால், அரிசி கஞ்சி, கபசுர குடிநீர், வைட்டமின் சி பானம், சாத்துக்குடி பழச்சாறு, மிளகு ரசம், போர்ன்விட்டா, காய்கறி சூப் மற்றும் போன்ற இணை உணவுகள் சரிவிகித இடைவெளிகளில் வழங்கப்பட்டு வருகின்றது.

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை புரிந்துள்ள 6,382 நபர்கள் தற்போது வீடுகளில் தனிமைப்படுத் தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் குடியிருப்போர், பொதுவெளியில் செல்லாதவாறு மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

கோயம்புத்தூர் மாநகர் பகுதிகளில் 24 பகுதிகளும், புறநகர் பகுதிகளில் 5 பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. கொரோனா தொற்று சிகிச்சைக்கென பிரத்யேகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 400, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 405, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 160, வட்ட அளவிலான மருத்துவமனைகளில் 471, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 240, தனியார் மருத்துவமனைகளில் 1,456, 13 அரசு மருத்துவமனைகளில் 651, மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எவ்வித அறிகுறியும் இல்லாதவர்கள் என கண்டறியப்படுபவர்களுக்கு கொடிசியா உள்ளிட்ட 6 பகுதிகளில் 1030 படுக்கை வசதிகள் என மொத்தம் 4813 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

சுகாதாரத்துறையின் மூலம் வீட்டில் தனிமைப்படுத்துதலை கண்காணிக்கும் பணிக்குழு, அரசு மற்றும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துதலை கண்காணிக்கும் குழு, நோய் தொற்று உள்ளவர்களின் தொடர்புடையவர்களை கண்காணிக்கும் குழு, ஊடகக் குழு, சமூகத்தில் மக்களிடையே தனிமையை உறுதி செய்ய குழு கிராம அளவிலான குழுக்கள் என பல்வேறு நிலையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அறை 24 மணிநேரமும் 3 மருத்துவர்கள் மற்றும் வருவாய்த்துறை பணியாளர்களைக் கொண்டு சுழற்சி முறையில் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களிடம் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்களின் நோய் அறிகுறிகளை கேட்டு அதற்கேற்ப மருத்துவர்களால் ஆலோசனைகள் அளிக்கப்பட்டு வருவதுடன், கொரோனா நோய் தொடர்பாக கேட்கப்படும் அனைத்து விபரங்களை தெளிவுபடுத்தி வருகிறார்கள்.

மேலும், மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் மாநகராட்சி சார்பில் கோவை கேர் எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா தொற்று குறித்து அறிந்து கொள்வதுடன், பாதுகாப்பு நடைமுறைகளையும் கடைபிடிக்க இயலும்.
மேலும், பொதுமக்கள் தங்களின் அருகாமையில் உள்ள மருத்துவமனைகள், மருந்துக்கடைகள் மற்றும் மாநகராட்சி உதவி மையங்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

கோயம்புத்தூர் மாவட்டத்தினுள் வாகனங்கள் மூலம் உள்நுழைவதை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் எல்லையோரம் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாளையார் சோதனைச் சாவடியில் வருபவர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை உறுதி செய்ய அவ்விடத்திலேயே மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளில் சராசரியாக சோதனைச் சாவடியில் மட்டும் 200-250 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 150 வாகனங்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் 130 வாகனங்கள் என மொத்தம் 280 வாகனங்கள் மூலமும் ஒலிப்பெருக்கியைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், ரேடியோ மூலம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதிநவீன இயந்திரங்கள், விசைத்தெளிப்பான்கள், கைத்தெளிப்பான்கள் மற்றும் பறக்கும் இயந்திரங்கள் மூலம் தொடர்ந்து கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பறைகள் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியினை உறுதி செய்திடவும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வராமல் இருப்பதை கண்காணிக்கவும், பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மாவின் அரசு பொதுமக்களை காக்க கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்னும் நுண் கிருமியினை எதிர்த்து போர் புரிந்து வருகின்றது. இப்போரில் அரசுடன் மக்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும். அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றுவதுடன் பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் முகக்கவசம் அணிவது அவசியம்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் கே.எஸ்.நரேந்திரநாயர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாநகர காவல் துணை ஆணையர் கோ.ஸ்டாலின், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்(பொ) காளிதாசு, ஈ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.