தற்போதைய செய்திகள்

விவசாயிகள்- பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை புரிகிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு

திண்டுக்கல்

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மேம்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை மகத்தான சேவை செய்கிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பாராட்டு தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலைய திறப்பு விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர்எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி அத்திட்டங்களை அனைத்து கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நிர்வாகத்தினை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளார்.

அம்மா வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசு, கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக ஊரக பகுதிகளில் வாழும் மக்களுக்கு பல்வேறு கடன் வசதிகளை அளித்தும், சிறுகுறு விவசாயிகளுக்கு கடன்களை வழங்கியும், நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு மகத்தான சேவை புரிந்து வருகிறது.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன், உரம், விதை உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல், சுயஉதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்புக் குழுக்களுக்கு கடன் வழங்குதல், மத்தியகால கடன் வழங்குதல் உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் ஊரக பொருளாதாரம் மேம்படவும், வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகராட்சி பகுதி, எரியோடு, வேடசந்தூர் வட்டத்தில் இ.சித்தூர் ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யும் கூட்டுறவு சில்லரை விற்பனை நிலையங்கள் ஏற்கனவே துவங்கி வைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனையடுத்து, இன்று பழனி சரகத்தில் பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி சரகத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டடம், ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரிய கலையம்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், திண்டுக்கல் சரகத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மார்க்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய அலுவலக கட்டிடம், ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட புதிய அலுவலக கட்டடம்,

ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டடம், ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட லிங்கவாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டடம், திண்டுக்கல் மார்க்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் ரூபாய் 19 லட்சம் மதிப்பீட்டில் WIF திட்டத்தில் கட்டப்பட்ட 100 மெட்ரிக் டன் கிட்டங்கி ஆகியவை திறந்து வைக்கப்படுகிறது.

திண்டுக்கல் மண்டலத்தில் 2011-ம் ஆண்டு முதல் 31.08.2020 வரை பல்வேறு கடன் திட்டத்தின்கீழ் 25 லட்சத்து இரண்டாயிரத்து 821 நபர்களுக்கு மொத்தம் ரூ.19,452.10 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 80,825 நபர்களுக்கு ரூ.217.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மண்டலத்தில் பயிர்க்கடனாக நடப்பாண்டில் 15.09.2020 வரை 13,665 நபர்களுக்கு மொத்தம் ரூ.166.72 கோடி வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அறிவுரையின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் திண்டுக்கல் மண்டலத்தில் 08.05.2020 முதல் 15.09.2020 வரை 261 சுயஉதவிக்குழுக்களில் உள்ள 3,178 உறுப்பினர்களுக்கு ரூ.1.59 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண உதவித் தொகுப்பு ரூ.1000 ரொக்கமாக 6,03,528 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.60.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண உதவித்தொகையுடன் ரூ.5.40 கோடி மதிப்பிலான இதர அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வழங்க கடந்த மே மாதத்திற்காக ரூ.5.42 கோடி, ஜுன் மாதத்திற்காக ரூ.5.46 கோடி, ஜுலை மாதத்திற்காக ரூ.5.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நிவாரண உதவித் தொகுப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகுப்பு ரூ.1000 மற்றும் விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியில் ஊரடங்கு உத்தரவு காலத்தில் பணிபுரிவதால், அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நியாயவிலைக் கடை விற்பனையாளருக்கு ரூ.2500, நியாயவிலைக் கடை கட்டுநருக்கு ரூ.2000, 655 விற்பனையாளர்கள், 24 கட்டுநர்கள் என மொத்தம் 679 பேர் பயன் பெறுவதற்காக மொத்தம் ரூ.17 லட்சம் தொகை அனுமதிக்கப்பட்டது.

கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ரூ.500 மதிப்புடைய மளிகை தொகுப்பு பைகள், 21.4.2020 முதல் விற்பனை செய்யப்பட்டன. திண்டுக்கல் மண்டலத்தில் 30,000 எண்ணிக்கையிலான மளிகை தொகுப்பு பைகள், ரூ.1.50 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் சேவைக்காக 56 வாகனங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 157 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 28,819 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.

பொதுமக்களுக்கு நியாயமான விலையில் தரமான பொருட்கள் கிடைக்க வேண்டுமென்ற உயரிய எண்ணத்தோடு கூட்டுறவுத்துறை ஏழை எளிய மக்களின் தேவையை அறிந்து அத்தியாவசிய தேவையான பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து, சேவை மனப்பான்மையுடன், லாபம் நோக்கோடு இல்லாமல் விற்பனை செய்து வருகிறது. பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.