தற்போதைய செய்திகள்

கூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

திண்டுக்கல்

கூட்டுறவுத்துறை மூலம் 4,12,223 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

முதலமைச்சர் ஆணைக்கிணங்க, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் முனைவர் இல சுப்பிரமணியன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்மு.விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம், பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையத்தையும்,

கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.1.64 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களையும் திறந்து வைத்து, 2,302 விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.4,089.20 லட்சமும், 6,824 மகளிருக்கு மகளிர் சுய உதவிக் குழுக் கடனாக ரூ.2401.20 லட்சமும், 3,178 நபர்களுக்கு கோவிட்-19 கடனுதவியாக ரூ.158.90 லட்சமும், 435 பயனாளிகளுக்கு சிறு வணிகக் கடனாக ரூ.217.10 லட்சமும், 505 பயனாளிகளுக்கு மத்தியகாலக் கடனாக (கறவை மாடு) ரூ.252.50 லட்சமும், மத்தியகாலக் கடனாக (டிராக்டர்) 24 நபர்களுக்கு ரூ.143.35 லட்சமும், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு கடனாக ரூ.6.50 லட்சம் உட்பட பல்வேறு கடனுதவிகள் என மொத்தம் 14,512 பயனாளிகளுக்கு ரூ.103 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

விழாவில்அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:- 

அம்மா அவர்கள் வழியில் செயல்படும், முதலமைச்சர், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக உயர்த்திட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக எடுத்து நம் மாநிலத்திற்குள் நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.

தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 41 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து 42-வது பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையமாக திண்டுக்கல் மாவட்டம், பூத்தாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 10 பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிலையங்கள் புதியதாக தமிழகம் முழுவதும் தொடக்கப்படவுள்ளன. கடந்த 2011 முதல் 2020-ம் ஆண்டு வரை அம்மா அவர்களின் அரசால் 33 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 01.04.2020 முதல் 31.08.2020 வரையிலான 5 மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுத்துறையால் நடத்தப்படும் 41 பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களில் ரூ.124.72 கோடி மதிப்பில் விற்பனை நடைபெற்றுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், முதல்கட்டமாக, மாநிலம் முழுவதும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000-ம், அதனைத் தொடர்ந்து, முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டங்களில் சில பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2-ம் கட்டமாக தலா ரூ.1000-ம் வழங்கினார்.

மேலும், ஏப்ரல் 2020 முதல் ஜூலை 2020 வரையிலான ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றை விலையில்லாமல் வழங்கினார். இது மட்டுமின்றி அனைத்து குடும்பங்களிலும் இணைக்கப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் விலையின்றி மறுமுறை உபயோகிக்கத் தகுந்த தலா 2 முகக் கவசங்களும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அம்மா அவர்களின் ஆட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டு மகளிர் பொருளாதார மேம்பாடடைய வழிவகுக்கப்பட்டது. அதுமட்டுமன்றி அம்மா அவர்களின் ஆட்சியில் கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவே விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பெண்களின் சிரமத்தினை குறைத்திட, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது.

மாநில அளவில் கூட்டுறவுத்துறையின் மூலம் 2011 முதல் 15.09.2020 வரை 98 லட்சத்து, 24 ஆயிரத்து 124 விவசாயிகளுக்கு ரூ.53,980.40 கோடியும், நடப்பாண்டில் 15.09.2020 வரை 3,63,090 விவசாயிகளுக்கு ரூ.2,838.10 கோடியும் வட்டியில்லா விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மண்டலத்தில் 2011 முதல் 15.09.2020 வரை 3,28,955 விவசாயிகளுக்கு ரூ.2,651.83 கோடி பயிர்க் கடனும், நடப்பாண்டில் 15.09.2020 வரை 13,665 விவசாயிகளுக்கு ரூ.166.72 கோடி வட்டியில்லா விவசாயக் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் பயிர்காப்பீடு இழப்பீடாக 31.08.2020 வரை 48,84,802 விவசாயிகளுக்கு, ரூ.8,815.07 கோடியும், இதில் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக 24,46,578 விவசாயிகளுக்கு ரூ.5,479.44 கோடியும், குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டத்தில், 6,975 விவசாயிகளுக்கு ரூ.8.81 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் 5,17,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4,044 கிடங்குகள் ரூ.533.78 கோடி மதிப்பில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

மாற்றுத்திறனாளிகள் கடனாக, தமிழகம் முழுவதும் 2011 முதல் 31.08.2020 வரை 65,229 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.270.95 கோடியும், திண்டுக்கல் மாவட்டத்தில், 538 நபர்களுக்கு ரூ.2.14 கோடியும், நகைக்கடனாக, தமிழகம் முழுவதும், 6,37,07,334 நபர்களுக்கு ரூ.2,50,723.72 கோடியும், திண்டுக்கல் மாவட்டத்தில், 14,73,823 நபர்களுக்கு ரூ.6,468.45 கோடியும், தானிய ஈட்டுக் கடனாக தமிழகம் முழுவதும் 2,09,989 நபர்களுக்கு ரூ.2,810.11 கோடியும், இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 4,025 நபர்களுக்கு ரூ.67.64 கோடியும், தமிழகம் முழுவதும்,

சிறுவணிகக் கடனாக 16,21,814 நபர்களுக்கு ரூ.2,093.59 கோடியும், திண்டுக்கல் மாவட்டத்தில், 44,543 நபர்களுக்கு ரூ.293.17 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. சிறுவணிகக் கடன் 10.09.2019 முதல் ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 15.09.2020 வரை மாநில அளவில் 47,512 நபர்களுக்கு ரு.141.69 கோடியும், திண்டுக்கல் மாவட்டத்தில் 15.09.2020 வரை 1,694 நபர்களுக்கு ரூ.6.87 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 6.96 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதில் 103.32 லட்சம் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். கூட்டுறவுத்துறையின் மூலம் 2011-2012 முதல் 31.08.2020 வரை 4,12,223 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,338.33 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் 80,825 உறுப்பினர்களுக்கு ரூ. 217.30 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கோவிட் -19 சிறப்பு கடனுதவி திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒரு உறுப்பினருக்கு குறைந்தது ரூ.5,000 அதிகபட்சமாக ஒரு குழுவிற்கு ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே பெற்றுள்ள கடனில் நிலுவைத் தொகை மற்றும் தற்போது பெறப்படும் தொகையும் சேர்த்து ரூ.10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கடனை திரும்ப செலுத்தும் காலம் 24 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரையாகும். முதல் 6 மாதங்களுக்கு கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. 6 மாதம் கழித்து சம தவணைகளில் திரும்ப செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் கீழ் 08.05.2020 முதல் 15.09.2020 வரை 14,398 குழுக்களுக்கு ரூ.114.22 கோடி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 268 குழுக்களுக்கு ரூ. 1.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 31.3.2011 அன்று ரூ.26,245.17 கோடியாக இருந்த வைப்புத்தொகை தற்போது அம்மா அவர்கள் ஆட்சியில், 31.08.2020 அன்று ரூ.59,376.77 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 2011 முதல் 31.08.2020 வரை அனைத்து வகைக் கடன்களாக 7,73,83,614 நபர்களுக்கு ரூ. 3,90,641.45 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாநில அளவில் 31.08.2020 வரை 6.47 லட்சம் ருபே விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 31.08.2020 வரை 4,964 ருபே பற்று அட்டைகள் மற்றும் 18,480 ருபே விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5,853 சங்கங்கள் ரூ.189.51 கோடி மதிப்பில் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 752 சங்கங்கள் ரூ.91.63 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 34 கிளைகள், 38 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டடங்கள் ரூ.20.51 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன.

மாநில அளவில், ரூ.124.93 கோடி மதிப்பில் 492 புதிய அலுவலகக் கட்டடங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில், மத்தியக் கூட்டுறவு வங்கியின் 1 கிளை மற்றும் 18 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்க கட்டடங்கள் ரூ.3.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளன. மாநில அளவில், ரூ.16.60 கோடி மதிப்பில் மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் 133 கிளைகளும், திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 3 கிளைகளும் துவக்கப்பட்டுள்ளன.

ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், கூட்டுறவுத்துறையின் சார்பில் இயங்கி வரும் 291 அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும், ரூ.1,026.07 கோடி அளவிற்கும், இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 3 அம்மா மருந்தகங்கள் மற்றும் 3 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் ரூ.8.36 கோடி அளவிற்கும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படும் 79 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 22.09.2020 வரை 58,721 மெட்ரிக் டன் அளவிலான காய்கறிகள், ரூ.174.63 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதும், இயங்கி வரும் நடமாடும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 29.03.2020 முதல் 22.09.2020 வரை 6,914.53 மெட்ரிக் டன் காய்கறிகள் ரூ.18.78 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் ஊரடங்கு காலத்தில் ரூ.500 மதிப்புடைய, 10 லட்சம் மளிகை தொகுப்பு பைகள், ரூ.50 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் 2011 முதல் 31.08.2020 வரை 678 முழுநேர நியாயவிலைக் கடைகளும், 1,767 பகுதிநேர கடைகளும் என மொத்தம் 2,445 புதிய கடைகள் திறக்கப்பட்டுள்ளன, மாநிலம் முழுவதும் 1,232 முழுநேர நியாயவிலைக் கடைகளுக்கும், 744 பகுதிநேர கடைகளுக்கும் என மொத்தம் 1,976 கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

நியாயவிலைக் கடைகளுக்கு அருகிலேயே அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் 5 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் 300 வகையான பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் அம்மா சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் துவங்க முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டு மாநில அளவில் 813 கடைகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 51 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, கொரோனா நோய்த் தொற்றினால் மரணமடைந்த இரண்டு விற்பனையாளர்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அரசால் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன்,செல்லூர் கே.ராஜூ ஆகியோர் அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இவ்விழாவில், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.கோவிந்தராசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.மருதராஜ், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சி.எஸ்.ராஜ்மோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர்கள், துணை பதிவாளர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.