சிறப்பு செய்திகள்

காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் அடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி.உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா, நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு, கடந்த ஆகஸ்ட் 14-ந்தேதி முதல் உயிர் காக்கும் கருவிகளுடன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மிகவும் தீவிர சிகிச்சை பிரிவில் பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வந்தது. அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று கடந்த 4-ந்தேதி முடிவு வந்தது. இந்த நிலையில், நேற்று (25-ந்தேதி) காலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

அதிகபட்ச உயிர் காக்கும் சிகிச்சை கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், இதய சுவாச நிபுணர்கள் கடுமையாக முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில், பிற்பகல் 1.04 மணிக்கு அவரது உயிர் பிரிந்துள்ளது என்று மருத்துவமனை அறிவித்தது. இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.