தமிழகம்

பொருளாதார பாதிப்பில் இருந்து தமிழகம் விரைந்து மீண்டு வருகிறது – முதலமைச்சர் தகவல்

சென்னை

பொருளாதார பாதிப்பில் இருந்து தமிழகம் விரைந்து மீண்டு வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் கறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வினை தொடங்கி வைத்து பேசியதாவது:-

இக்கொரோனா காலகட்டத்தில் ஏப்ரல் முதல் இதுவரை, 2,37,090 சுய உதவிக் குழுக்களுக்கு, 8,557 கோடி ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் தனியே கொரோனா நோய்த் தொற்று காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 87,327 சுய உதவிக் குழுக்களுக்கு சுமார் 954.80 கோடி ரூபாய் அளவிலான பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

• குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

• எனது தலைமையில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டங்கள் நடத்தி, உடனுக்கு உடன் தொழில் நிறுவனங்களுக்கு கடன்களை வழங்க அறிவுறுத்தியதினால், மத்திய அரசின் கடன் திட்டத்தில் மிக அதிக அளவில், அதாவது சுமார் 8,585 கோடி ரூபாய்க்கான ஒப்புதலினை பெற்று இந்தியாவில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

• அம்மாவின் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், அரசின் நலத்திட்டங்கள் மக்களை பெருமளவில் சென்று சேர்ந்து, மக்களை பொருளாதார பாதிப்பில் இருந்து பாதுகாத்தன எனவும், வேலைவாய்ப்பின்மை இரண்டே மாதங்களில், ஆறில் ஒரு பங்காக சரிந்துள்ளது எனவும், தனி நபர் வருவாய் படிப்படியாய் உயர்ந்து கொரோனா சூழலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விரைந்து மீண்டு வருகிறது எனவும் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.