தற்போதைய செய்திகள்

முன்னாள் மேயர் சிவராஜ் 129-வது பிறந்தநாள் விழா – அமைச்சர்கள் மரியாதை

சென்னை

சென்னையின் முன்னாள் மேயர் என்.சிவராஜ் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள், சென்னை, தங்கசாலை, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று காலை தனிமனித இடைவெளியை கடைபிடித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இது குறித்து அரசின் செய்திக்குறிப்பு வருமாறு:-

புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மேயர் என்.சிவராஜ் பிறந்த தினமான செப்டம்பர் 29-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னையின் முன்னாள் மேயர் என்.சிவராஜ் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை, தங்கசாலை, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டு தனிமனித இடைவெளியை கடைபிடித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு)
ச.சண்முகசுந்தரம், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.