திருவள்ளூர்

கறவை மாடுகளுக்கு மானிய விலையில் தீவனம் – மாவட்ட ஆவின் பெருந்தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் தகவல்

திருவள்ளூர்

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் மூலம் கறவை மாடுகளுக்கு மானிய விலையில் தீவனங்கள் வழங்கப்படும் என்று திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் தெரிவித்துள்ளார்.

திருத்தணி அடுத்த வேலஞ்சேரியில் புனரமைக்கப்பட்ட தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிட திறப்பு விழாவில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆவின் பெருந்தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

பால்வளத்துறை மேம்பாடு அடைய அரசு பல எண்ணற்ற திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. ஆவின் நிறுவனம் உலக நாடுகள் அளவில் வரவேற்பு பெறுகின்ற வாய்ப்பை உருவாக்கித் தந்து வெண்மைப் புரட்சிக்கு அடித்தளமாய் விளங்கி வருகின்றது. முதலமைச்சரின் ஆலோசனைப்படி, பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 564 சங்கங்களை உள்ளடக்கி 1.60 லட்சம் லிட்டர் பாலை நாளொன்றுக்கு கொள்முதல் செய்தும், தினந்தோறும் சுமார் 1 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்தும் தனி முத்திரை பதித்து வருகிறது.

பால்வளத் துறையில் பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் கால்நடைத் தீவனத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.2 முதல் ரூ.7 வரை மானியமும், தாது உப்பு கலவைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை மானியமும் ஒன்றியத்தின் சொந்த செலவில் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட ஆவின் பெருந்தலைவர் வேலஞ்சேரி த.சந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மேலாளர்கள் உமா, சங்கர், அனீஸ், விரிவாக்க அலுவலர் சிவஞானம், கழக நிர்வாகிகள், பால் உற்பத்தியாளர், சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.