காஞ்சிபுரம்

அம்மாவின் லட்சிய கனவை நிச்சயம் நிறைவேற்றுவோம் – கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் சபதம்

காஞ்சிபுரம்

தமிழகத்தில் 100 ஆண்டுகள் கழக ஆட்சி புரியும் என்ற அம்மாவின் லட்சிய கனவை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் முன்னிலை வகித்தார். கழக பாசறை இணை செயலாளர் ஆர்.எஸ்.முத்துசாமி, கழக பாசறை துணை செயலாளர் இருங்காட்டுக்கோட்டை எஸ்.சிவக்குமார் ஆகியோர் வரவேற்புரையாற்றினர்.

கழக பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாமை கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான பா.பென்ஜமின் சிறப்புரையாற்றினார்.

பின்னர் கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்குப் பின்பும் கழகம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி புரியும் என்று சட்டமன்றத்திலே சொன்னார். அப்படி ஏன் சொன்னார் என்றால் உங்களை போன்ற இளைய தலைமுறையினர் இந்தக் கழகத்தை பிற்காலத்தில் வழி நடத்துவார்கள் என்பதனால் தான். அம்மாவின் லட்சியத்தை நிறைவேற்றியே தீருவோம்.

திமுக ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரத்தில் மின்சார பற்றாக்குறையினால் நெசவாளர்கள் பட்ட துயரம் எண்ணிலடங்காது. ஆனால் இன்றைய தினம் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. 20 லட்சம் மாணவர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியை போற்றுகிறார்கள்.

திமுகவினர் மாணவ சமுதாயத்தை கட்சியில் இணைக்கிறார்கள் என்றால் ஏதோ ஒரு சுயநலத்திற்காக தான் இருக்கும். ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அப்படி அல்ல. 2008-ம் ஆண்டில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பாசறையை கொண்டு வந்ததன் காரணமாகத்தான் இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலே என்னை போன்றோர் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ளார்கள். பிறந்தோம், வாழ்ந்தோம் என்று இல்லாமல் வாழ்க்கையில் எதையாவது நீங்கள் சாதிக்க வேண்டும். எனவே நீங்களும் மக்கள் பணியாற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் பேசினார்.