தமிழகம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் இல்லை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை

சட்டப்பேரவை உறுப்பினர்கள் உயிரிழப்பால் காலியாகவுள்ள திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் இல்லை எனத்தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி உயிரிழந்தார். இதனால் திருவொற்றியூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதபோல்வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானதால் அந்த தொகுதியும்காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் கொரோனா தொற்று ஆரம்பமான நிலையில் இடைத்தேர்தல் 6 மாதத்திற்குள் நடக்கும் என்பது தள்ளிப்போனது. இந்நிலையில் இவ்விரண்டு தொகுதிகள் உட்பட 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம்  வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

அசாம் மாநிலத்தில் ரங்கபுரா, சிப்சாகர் தொகுதிகள், கேரளாவில் குட்டநாடு, சாவரா தொகுதிகள், தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 13 பலகாட்டா தொகுதி என 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்க மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் பல்வேறு காலகட்டங்களில் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை நடத்தப்பட்டதன் அடிப்படையில் மேற்கண்ட 7 சட்டப்பேரவைத்தொகுதிகளின் இடைத்தேர்தலை நடத்தும் சூழ்நிலை இல்லை என தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து அந்தந்த மாநிலங்களின் சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கப்படும்”.

இவ்வாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.