செங்கல்பட்டு

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கழகத்தின் எஃகு கோட்டை – சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் உறுதி

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கழகத்தின் எஃகு கோட்டையாகும் என்று மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் கூறினார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியம் கொளப்பாக்கத்தில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.கஜா (எ) கஜேந்திரன் ஏற்பாட்டில் மாவட்டக் கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஏராளமானோர் பாசறையில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

பின்னர் மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசியதாவது:-

“தமிழகமெங்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கழக பாசறையில் ஆர்வமுடன் இணைவதை தினந்தோறும் காண முடிகிறது. அந்த வகையில் இன்றைய தினம் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றியம் கொளப்பாக்கத்தில் கூடியுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை காணும்போது கழக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று பல்வேறு அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளதை மெய்ப்பிக்கின்றது.

தமிழக மக்களுக்காக காவேரி நதிநீர் பிரச்சினை, முல்லை பெரியாறு உட்பட பல்வேறு பிரச்சினைகளில் நீதிமன்றம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியது கழக அரசுதான் என்பதனை நீங்கள் நன்கு உணர்ந்துள்ளதோடு, மாணவர்களுக்கு தேவையான மடிக்கணினி, பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித் தொகையும் வழங்கியது கழக அரசுதான் என்பதனையும் நீங்கள் அறிவீர்கள். வருகின்ற 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெற்று செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் கழகத்தின் எஃகு கோட்டையாகும் என்பது உறுதி.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.