தற்போதைய செய்திகள்

கழகத்துக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை

கழகத்துக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகத்தின் சார்பாக கிறிஸ்துமஸ் விழாவில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் பங்கேற்றார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒருங்கிணைப்பாளர் ஒரு குட்டி கதை சொன்னார். அதில் தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வதுதான் தலைமைக்கு அழகு என்று சொல்லியுள்ளார். சசிகலாவை கட்சியில்சேர்க்க வேண்டும் என்று சூசகமாக சொல்கிறாரா?

பதில்:- மனித குலம் தோன்றியது முதல் தவறு செய்வது என்பது இயல்பு. ஆனால் அந்த தவறை திருத்திக் கொண்டு திருந்தி வாழ்வதுதான் உண்மையில் மனிதக் குலத்திற்குச் செய்கின்ற ஒரு சிறப்பு. அந்த அடிப்படையில் ஒரு பெருந்தன்மையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தவறை உணர்ந்து இனிமேல் ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அந்த அர்த்தத்தில் வருகின்றவர்களுக்கு நிச்சயமாக மன்னிப்பு உண்டு. ஆனால் சசிகலாவுக்கு மன்னிப்பே கிடையாது. அவரும் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.

சசிகலாவை பொறுத்தவரை கட்சி பெயரையோ, கட்சி கொடியையோ உபயோகப்படுத்தக்கூடாது
என்று காவல் ஆணையரிடம் கட்சி சார்பாக என் பெயரில் புகார் அளித்துள்ளோம். ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் ஒப்புக் கொண்டுதானே இதனை அளித்துள்ளோம்.

இதிலிருந்து ஒரு தெளிவான நிலை தெரிகிறது இல்லையா? ஒருங்கிணைப்பாளரும் சரி,இணை ஒருங்கிணைப்பாளரும் சரி,தலைமை கழக நிர்வாகிகளும் சரி,மாவட்ட கழக செயலாளர்களும் சரி,அதுபோல கிளை கழகத்திலிருந்து ஒன்றரைகோடி தொண்டர்களும் சரி ஒரே எண்ணத்தோடுதான் இருக்கிறோம். சசிகலாவுக்கும் இந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லை. அவர் இல்லாமல் கட்சி நன்றாக போய் கொண்டிருக்கிறது.

சசிகலாவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பெருந்தன்மை என்பது கழகத்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. மக்களும், கழக தொண்டர்களும் ஒரு தேவையில்லாத சக்தி என்ற அடிப்படையிலே, நிராகரிக்கப்பட்ட சக்தியாக, பலவித முயற்சி எடுத்து, எப்படியாவது கட்சியை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்து தோல்வி அடைந்த சக்தியை இதற்கு ஒப்பிட்டு பேசுவது சம்பந்தம் இல்லாத ஒன்று. ஒருங்கிணைப்பாளர் சொன்ன கதை பாமர,குடிமக்களுக்கு பொருந்தும். சசிகலாவுக்கு பொருந்தாது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.