தற்போதைய செய்திகள்

அரசின் சாதனை திட்டங்களே கழகத்தை வெற்றிபெற செய்யும் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

மதுரை

அம்மா அரசின் சாதனை திட்டங்களே கழகத்தை வெற்றி பெற செய்யும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்து பேசியதாவது:-
வரும் தேர்தலில் தகவல் தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். முகநூல், வாட்ஸ்- அப், இன்ஸ்டாகிராம் போன்றவை மக்கள் மத்தியில் வேகமாக பரவுவதால் அதில் பல கட்சிகள் தற்போது பிரச்சாரம் செய்து வருகின்றன. தி.மு.க. மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளுக்கு மதிப்பு ெகாடுக்காமல் பீகாரின் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின் பேரில்

சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. ஸ்டாலினின் இந்த செயலுக்கு கட்சியில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் நமது இயக்கத்தில் அப்படி இல்லை. கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகளின் கருத்துகளை ஏற்று மக்கள் பணியை செய்கிறோம்.

திமுகவின் பித்தலாட்ட தேர்தல் பணியை மக்கள் ஏற்க மாட்டார்கள். தீர ஆராய்ந்து தான் தேர்தலில் வாக்களிப்பார்கள். வரும் தேர்தலில் திட்டங்கள், செயல்பாடுகளை வைத்தே மக்கள் முடிவெடுப்பார்கள்.சட்டம்- ஒழுங்கை கேலிக்கூத்தாக மாற்றாத அரசு அம்மாவின் அரசாகும்.

தமிழகத்தில் நடப்பது எல்லாம் மக்களுக்கு நன்றாக தெரியும். திமுகவின் அவலங்களை மறந்து விட்டார்கள் என அக்கட்சியினர் நினைக்கலாம். ஆனால் மக்கள் இன்னும் மறக்கவில்லை. அம்மா அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொன்னால் போதும். வரும் தேர்தலில் நாம் வெற்றி பெறலாம். மூன்றாவது முறையாக நிச்சயம் அம்மாவின் அரசு பதவியேற்று மேலும் பல சாதனைகள் படைக்கும்.

கொரோனா தடுப்பு பணியை சிறப்பாக ேமற்கொண்டதற்காக தமிழக அரசை பிரதமர் மோடி பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மத்தியில் பாராட்டியுள்ளார். இதனை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. குறை சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். அவர்களை திருத்தவே முடியாது. ஸ்டாலின் என்ன பேசினாலும் அரசை பற்றி குறை தான் சொல்வார். கடைசி வரை ஸ்டாலினின் ஆசை நிறைவேறா ஆசையாகவே முடியும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், கழக பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக மாணவர் அணி இணை செயலாளர் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அரவிந்தன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலை ராஜா, செயற்குழு உறுப்பினர் சண்முகவள்ளி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.