தற்போதைய செய்திகள்

சென்னை மீனவர்கள் 8 பேர் 7-ந்தேதி தாயகம் – திரும்புவர் அமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்

சென்னை

மியான்மரில் வானிலை மோசம் காரணமாக சென்னை மீனவர்கள் 8 பேர் வருகிற 7-ந்தேதி தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று காணாமல் போன 9 மீனவர்கள் தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 14.9.2020 அன்று மியான்மர் கடற்பகுதியில் அந்நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டு பத்திரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் இதர வசதிகள் அங்குள்ள இந்திய தூதரகம் வழியாக செய்து தரப்பட்டது.

இந்நிலையில் அங்கு தனிப்பட்ட நிகழ்வில் காணாமல் போன மீனவர் பாபுவை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மியான்மரில் தற்போது உள்ள 8 தமிழக மீனவர்களையும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் 28.9.2020 அன்று விமானத்தின் மூலம் புதுடெல்லிக்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.இந்நிலையில் மியான்மரில் வானிலை மோசமாக உள்ளதால் தமிழக மீனவர்கள் 8 பேரும் வரும் 7.10.2020 அன்று புதுடெல்லி வழியாக சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தனதுசெய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.