தற்போதைய செய்திகள்

பொதுமக்களுக்கு சேவை செய்வதில் இந்தியாவுக்கே தமிழகம் வழிகாட்டி – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

மதுரை

மக்களுக்கு சேவை செய்வதில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்தோடு கூறினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஒன்றியம் வி.அம்மாபட்டியில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ரூ.76 லட்சத்தில் போடப்பட்ட வி.அம்மாபட்டி- சத்திரப்பட்டி தார்சாலை ஆகியவற்றை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் திறந்து வைத்தார்.

பின்னர் திருமங்கலம் தொகுதி வு.கல்லுப்பட்டி ஒன்றியம் பேரையூரில் சுகாதார துறை சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய பெட்டகத்தை வழங்கிய அமைச்சர் சித்தா, ஆயுர்வேதம் மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு கண்காட்சி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து 200 மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் பேசியதாவது:-

கடந்த 4 ஆண்டுகளில் திருமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக தொகுதி மக்கள் சார்பாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருக்கிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சாலை, குடிநீர், மின்சார வசதிகள் என அனைத்து அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் இ்ந்த உள்கட்டமைப்பு வசதி கிடையாது.

கொரோனா நோய் தொற்று காலத்தில் முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டதை பாரதப் பிரதமர் இந்தியாவிற்கே முன் உதாரணமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால் இதனை
எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன.

அம்மாவின் திட்டங்களான மாதந்தோறும் 20 கிலோ அரிசி, 100 யூனிட் மின்சாரம் இலவசம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, மாணவர்களுக்கு மடிகணினி மற்றும் அம்மாவின் கனவு திட்டமான உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகன திட்டம் இப்படி அனைத்து திட்டங்களையும் வழங்கி இந்தியாவிலேயே இதுபோன்று திட்டங்கள் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தவில்லை என்ற வரலாற்றை அம்மாவின் அரசு பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் இது போன்ற திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

மேலும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உள்ளது. அது மட்டுமல்லாது தமிழகத்தில்தான் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது.அம்மாவின் திட்டங்களை சொல்ல ஒரு நாள் போதாது. சொல்லிக்கொண்டே போகலாம். வானத்திற்கு எல்லை இல்லை. மக்களுக்கு சேவை செய்வதில் இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.