தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட முனைப்புடன் செயல்பட வேண்டும்- அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள்

தருமபுரி

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பந்தாரஅள்ளியில் ரூ.4.15 லட்சம் மதிப்பீட்டில் 58 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆணையின் படி, 2001-ம் ஆண்டு தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சிறப்பு நிதியாக பொருளாதார மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருகால் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியில் இயங்கும் வாகனம் வழங்கப்படுகிறது. கிராமங்கள் தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கு என சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இது வரை தருமபுரி மாவட்டத்தில் 56,400 சிறப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறைக்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் நவீன முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் நன்கு பயன்படுத்தி கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் குணம் தர்மத்தை கொடுக்கும், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் முனைப்புடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டுதல்களையும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளையும் பின்பற்றி கொரோனா தொற்றை தடுக்க வேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிப்பது, அவசியம் முகக்கவசம் அணிவது, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவுவது உள்ளிட்ட நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் காவேரி, ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் செல்வராஜ், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் செந்தில்குமார், கூட்டுறவு சங்கத்தலைவர் அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஜானகி, வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.