தற்போதைய செய்திகள்

விசுவாசமாக உழைத்தால் பதவி தேடி வரும் – அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு

கடலூர்

கழகத்திற்கு விசுவாசமாக உழைத்தால் பதவி தேடி வரும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி கடலூர் மத்திய மாவட்டம் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம் ஏற்பாட்டின் பேரில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 300 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தமிழக தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். கழகத்தில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

கழகத்தில் இணைந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த கட்சியில் மட்டும் யார் வேண்டுமானாலும் எந்த பொறுப்புக்கும் வரலாம். நமது கழகத்தில் மட்டும் தான் ஜனநாயகம் வேரோடி கிடைக்கிறது. இங்கு உழைப்பவர்களுக்கு உயர்வுண்டு.

விசுவாசமாக இருப்பவர்களுக்கு பதவி உண்டு. இன்று தமிழகத்தில் கலைக்கல்லூரி இல்லாத சட்டமன்ற தொகுதிகளே இல்லை என்ற நிலையை நமது முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உருவாக்கியுள்ளார்கள். கிராமப்புற மாணவர்களுக்கு 7.5 சதவீத மருத்துவக் கல்லூரியில் இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது எடப்பாடி அரசு. இது இளைஞர்களுக்கான அரசு, ஏழை எளிய மக்களுக்கான அரசு.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் கே.காசிநாதன், கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் இராம.பழனிச்சாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் கெமிக்கல் ஆர்.மாதவன், நகர துணை செயலாளர் வ.கந்தன், பொருளாளர் எஸ்.தனசேகரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் எஸ் வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.