பெரம்பலூர்

பெரம்பலூரில் கழக தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் – ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ, வினுபாலன் பங்கேற்றனர்

பெரம்பலூர்:-

பெரம்பலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் நடைபெற்ற கழக தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமையில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினு பாலன் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி.இராமச்சந்திரன் பேசியதாவது:-

கழக தொழில்நுட்ப பிரிவு அணியை வலுப்படுத்த கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நான்கு மண்டலங்களாக அறிவித்து பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர். தகவல் தொழில்நுட்ப பிரிவில் திறம்பட செயல்படும் நபர்களுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் வாங்கி தருகிறேன். 2021-ல் வரவிருக்கிற தேர்தலில் தொழில் நுட்ப உத்திகள் தான் களத்தில் இருக்க போகிறது. அதற்கு ஏற்றார் போல் நமது கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இளைஞர்கள் ஆர்வமுடன் செயல்பட்டால் பொறுப்புகள் நம் கழகத்தில் தான் கிடைக்கும்.

இவ்வாறு ஆர்.டி.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ பேசினார்.

அதைத் தொடர்ந்து திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினு பாலன் பேசுகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. புதிதாக நியமிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். தி.மு.க.வில் கட்சியை வளர்ப்பதற்காக வட நாட்டிலிருந்து பிரசாந்த் கிஷோர் கார்பரேட் கம்பெனி காரனை பல கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். அவர் எழுதி கொடுக்கும் வசனத்தை தான் ஸ்டாலின் பேச வேண்டும். ஆனால் அதையே அவரால் பார்த்து பேச முடியவில்லை. இவர் எப்படி தொண்டர்களை வைத்து கட்சி நடத்துவார்.

ஆனால் நம் கட்சியில் தான் அடிமட்ட தொண்டனும் ஆட்சியில் அமர முடியும். ஆகவே தொண்டர்களாகிய நீங்கள் உண்மையாக கட்சியில் உழைத்தால் உங்களுக்கு பொறுப்பு தேடி வரும். தகவல் தொழில் நுட்ப பிரிவில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகிய தொழில்நுட்பம் மூலம் நம் கட்சியின் பத்தாண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு கைபேசி மூலம் அனுப்பி தகவல் தொழில் நுட்பத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்றார்.