தற்போதைய செய்திகள்

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மக்கள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ உறுதி

தூத்துக்குடி

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க மக்கள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் சத்திரப்பட்டி, வடக்கு சுப்பிரமணியபுரம், லக்கமாள்தேவி, கோவில்பட்டி ஒன்றியம் மேலபாண்டவர்மங்கலம் ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் வழங்கும் பணிகள் துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 84 அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்கள் வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது:-

உலகம் முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா ரயில், விமானம், பஸ் உள்ளிட்ட போக்குவரத்துகளையும் முடக்கி வைத்திருந்தது. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட மக்களின் சிரமங்களை போக்கிட மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு 5 மாதங்களுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்களை விலையில்லாமல் வழங்கியது. தற்போது மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளபோதிலும் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

முககவசம் உயிர் கவசம் என்பதை உணர்ந்திட வேண்டும். கட்டாயம் பொது இடங்களுக்கு செல்கையில் முககவசம் அணிய வேண்டும். கொரோனா தொற்று காலத்திலும் களப்பணிக்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரே முதல்வர் நமது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்தான். அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி 92 சதவீதத்துக்கு மேலான கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மேலும் தமிழகத்தில் இறப்பு சதவீதம் இந்தியாவிலேயே மிகவும் குறைவாக உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சுகாதாரத்துறையும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்ட காரணத்தினால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உயிரிழப்பு தமிழகத்திலேயே மிகவும் குறைவாக 0.7 சதவீதமாக உள்ளது. அனைவரும் முககவசம் அணிந்து தங்கள் உயிரையும், தங்களது குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து கவனத்துடன் இருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்ட மக்களின் முழு ஒத்துழைப்புடன் கொரோனா தொற்றினை விரைவில் முழுமையாக ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.