தற்போதைய செய்திகள்

தகவல் தொழில் நுட்பத் துறையில் காலத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்கள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை

தகவல் தொழில் நுட்பத் துறையில் காலத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் தொடர்பான அனைத்து திட்ட பணிகள் முன்னேற்றங்கள் குறித்து மின்னாளுமை ஆணையரகத்தில் ஆய்வு நடத்தினார்.

இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

முதலமைச்சர் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மூன்று கொள்கைகளை வெளியிட்டார்கள். தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு முன்னனியில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் தேவைகள் அதிகமாவதால் காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை கொண்டுவருவது, நவீன உத்திகளை புகுத்துவது போன்ற பணிகள் தமிழக அரசு செய்து வருகிறது.

கொரோனா காலத்தில் மருத்துவத்துறை, E-பாஸ் வழங்குதல், தனியார் மற்றும் அரசு துறைகளில் தகவல் தொழில்நுட்பம் சிறந்த சேவையாற்றியது. எல்காட் மூலம் தனியார் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. கல்வித்துறையில் இணைய வழிகல்விக்கு உதவி புரிந்துள்ளது. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு போன்றவற்றில் தகவல் தொழில்நுட்பத் துறை பங்கு மகத்தானது. அதேபோல் உழவன் செயலியில் வேளாண்துறையுடன் ஒருங்கிணைந்து செல்கிறோம்.

மேலும், இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக ஆளுநர் உரை, முதல்வரின் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப அறிவிப்புகள் குறித்த பணி முன்னேற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் அறிவித்த பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகளை தங்கு தடையின்றி அறிந்திட உதவும் மாநிலத்தில் குடியிருப்போரின் குடும்ப தரவு தளம் (State Family Database) உருவாக்குதல்
* முக அடையாள வருகை பதிவேடு அமைப்பின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் குறித்த மாதிரி திட்டம்.
* வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கான உயர் தனி சிறப்பு மையம் தொடங்குதல்.
* கோவிட் – 19 தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடு தரவுகளுக்கான தரவு பகுப்பாய்வு மற்றும் அவைகளை காட்சிபடுத்துதல்.
* நாள்தோறும் தொற்று நோய் குறித்த மாவட்ட வரைபடம் தயாரித்தல், ஆரோக்கிய சேது, குரல் வழி சேவையை வடிவமைத்து தொடங்குவது.
* பொது சுகாதார இயக்குநரகத்தில் அமைந்துள்ளது உதவி மையத்திற்கு நோய் தொற்று கண்டறியும் நிகழ்வால் வழிகாட்டுதல்.
* தனிமைப்படுத்துதல் கண்காணிப்பு முறையினை வடிவமைத்து உருவாக்குதல்.
* நம்பிக்கை இணைய கட்டமைப்பு உருவாக்குதல் (Block Chain Back Bone Infrastructure).
* பிறப்பு முதல் இறப்பு வரையில் அரசால் வழங்கப்பட வேண்டிய அனைத்து சேவைகளையும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் ஏதுமின்றி தாமாக முன்வந்து வழங்குதல்.
* தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சட்டமன்ற அறிவிப்புகளின் முன்னேற்றங்கள்.
* தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை – 2020.
* தமிழ்நாடு நம்பிக்கை இணையக்கொள்கை (TN Block chain Policy 2020) மத்திய அரசின் தொழில்நுட்ப உதவியுடன் ரூ.2.10 கோடி மதிப்பில் உருவாக்குதல்.
* நமது அரசு என்கின்ற தமிழ்நாடு மின்னாளுமை முகமை திட்ட பணி முன்னேற்றம்.
* இணைய வழி தேர்வு போன்ற பல்வேறு திட்டங்கள் பணி முன்னேற்றங்கள் குறித்து விரிவான ஆய்வினை மேற்கொண்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, மின்ஆளுமை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா, இணை இயக்குநர் ரமண சரஸ்வதி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.